உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99


ஏற்றும் எண்ணம் பகைவருக்கே உண்டாகிறது. அவர்களே கேடு சூழ்கிறார்கள். "கெடுவான் கேடு நினைப்பான்" என்ற பழமொழியை இக் கதைமெய்ப்பிப்பதாகப் பாடுகின்றார் சேக்கிழார். பின்னரும், வழக்கில் தோற்றதற்காகப் பகைவர் கழு ஏற்றப்படவில்லை. பல மக்களைத் தீயில் பொறித்தெடுத்தற்குத் தீயிட்டுக் கொலைப்பழி கொண்டவர்களாதலின், செங்கோன் முறைப்படி தீ வைப்போர்க்கு ஏற்பட்ட கழுமரமே அவர்களுக்கு இடமாயிற்று. அவர்களே இந்த முறையை விரும்பியபடியால், விரும்பியபடி இறக்க, இறப்போர்க்கு அரசன் உதவ வேண்டும் அன்றோ? அவ்வளவிற்கே அவர்கள் சூளுரையை அரசன் பயன்படுத்திக் கொள்கின்றான். இதுவே சேக்கிழார் கதை.

மன்னவன் மாறன் கண்டு, மந்திரியாரை நோக்கித்
துன்னிய வாதி லொட்டித் தோற்ற இச்சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பால் அனுசிதம் முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க என்று கூற.

என வருதல் காண்க. 'முறை செய்க' என்று கூறியதன் பொருள் ஆழத்தை நோக்குக. தமது மறை யொழியால் தீ மூட்டுவதாக அவர்களே அரசனிடம் சொல்லினர். மறை மொழியால் ஒன்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் இவர்களுக்கு இல்லை என்பது புனல் வழக்காலும், அனல் வழக்காலும் ஏற்பட்டது. ஆதலின், இவர்கள் தீயிட்டதும் மறை மொழியாலன்று; தீயாலேயே என்பதும் தெளிவாகியது.