பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


காலத்தில் மயிற்படாம் போர்த்து விளங்குவது போலக் கண்ணைக் கவர்வது கண்டு, அங்கும் இறைவன் வடிவை எதிர்நோக்கி இறைஞ்சினர். சுருண்டெறிந்து ஓவென்றிரைக்கும் கருங்கடல், கதிரவன் ஒளியால் பலநிறம் பெற்றுப் பளபள என்று மின்னுவது கண்டு, கடவுளெனக் கை கூப்பினர். நண்பகலின் நெல்லிக் கனியுண்ட பின், தண்ணென்ற தீம் பொழிலிடையே மின்ன‍ற் பெருக்கென ஓடும் அருவி நீரையுண்டு அவ்வினிமையிலும் திருமாலாம் ஆண்டவனை அறிந்து போற்றினர். பாம்பின் பளப்பினையும், அதன் கூத்தமைதியையும் கண்டு, தம் பகைமையை மறந்து அங்கும் அழகு வடிவாம் கடவுளைக் கண்டனர். கதிரவன் உலகப் பொருள்களின் உயிரூற்றாய் ஆற்றற் பிழம்பாய் விளங்கி எரிவது கண்டு இறைவன் என ஏத்தினர். தீப்பிழம்பின் பேராற்றலையும், தூய்மையினையும் திறம்பட உணர்ந்து சிவனெனத் தொழுதனர். உணவு அட்டுத் தந்தும், குளிரைப் போக்கியும், இன்பந்தருவதை எண்ணி இறைஞ்சினர். தீயிலே சிவனைக் கண்டு விருந்தோடுண்ணுவதே எரியோம்பலாயிற்று.

இவ்வழகெலாம் கண்டு மனமுருகிப் பாடிய பாடல்களே மறைமொழிகளாயின. மறை மொழிகளோ உண்மை மொழிகளாம். உண்மையோ உலகம் தோன்றிய நாள்தொட்டு ஒளிர்வதொன்றாம். “பொருள்கள் தரைமேல் விழுகின்றன, தரையிலுள்ள இழுக்கு மாற்றலால்” என்ற உண்மையைக் கண்டு பிடித்தவர் நியூடனே.