உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


கொள்ளிடமாம். 1. அணுவேயன்றி, 2. உயிர், 3. இயக்கத்தின் ஊடுநிலை, 4. இயங்காமையின் ஊடுநிலை, 5. வான், 6. பொருண்மை (புத்கலம்-சடப்பொருள்)— இவை எலாம் திரிபிலாத பல கொள்ளிடங்களை உடையனவாம்; கொள்ளிடம் அல்லது உடல் (காயம்) உடையனவே ஆம்; அஸ்தி காயங்களாம். இத்தகைய கொள்ளிடம் இல்லாது பல கொள்ளிடங்களை உடையது பரப்புடைப் பொருளாம். கால அணுக்களோ கலவையாகாத ஒன்று. அது பல கொள்ளிடங்களை உடையது அன்று. ஆதலின் அது பரப்பற்றது; உடல் (காயம்) அற்றது; அனஸ்தி காயமாம்.

“மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி” என நன்னூலார் இந்த ஆரம்ப வாதமே கூறுகிறார். சங்கர நமச்சிவாயர் இதனை,

“சிதலது நீர்வாய்ச் சிறு துகளால் புற்றுரு அமைந்த பெற்றியது என்ன ஐம்புலப் பேருரு ஐந்தும் ஐந்தணுவால் இம்பரில் சமைவது யாவரும் அறிதலின், அனாதி காரணமாகிய மாயையினை ஈண்டுக் கூறாது ஆதிகாரணமாகிய செவிப்புலனாம் அணுத்திரளை எழுத்திற்கு முதற்காரணம் என்றார். இவ்வாசிரியர்க்கு மாயை உடன்பாடன்று; அணுத்திரள் ஒன்றுமே துணிவெனின், பிறிதொடு படாஅன் தன்மதம் கொளல் என்னும் மதம் படக் கூறினார் என்று உணர்க. ஈண்டு அணு என்றது ஒலியினது நுட்பத்தை” என்று விளக்குவது காண்க.