உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


என வருதல் காண்க. இத்துறவிகள், நாணம் விட்டவர்களாய் இருந்தால், இவர்கள் அளவிலேனும் பழியொன்று மில்லை எனலாம். ஆனால், இவர்களுக்கும் உள்ளுக்குள், நாணம் இருந்தது என்பதனை,

‘தடுக்கா லுடன் மறைப்பார்,’

என்றும்,

‘பாயுடுப்பார்’

என்றும்,

‘பின்னொடு முன்னிடு தட்டை சாத்தி’

என்றும் பாடுகிறார். உடையைத் துறந்து செல்வோர் பெண்கள் வரின் தம்முடலை மூடிக் கொண்டனர் போலும். அந்நிலையில் அவர்கள் மனம் எவ்வாறிருந்திருக்க வேண்டும்?


III

'கேழல் வினை' எனச் சில துறவிகளது செயலைப் பழித்தமையை முன்னரே கண்டோம். அத்துறவிகள் உடலையும், கண்ணையும், வாயினையும் கழுவாது, மாசு படிந்த மேனியராய்த் திரிந்தனர்; உடலைக் கழுவுவதும் மேனி மினுக்கென எண்ணி அதனையும் துறந்தனர். குளிப்பதும் காமத்தினைத் தூண்டும் என்பதும் ஒரு கொள்கை. கணவனைப் பிரிந்த கற்புடைய மங்கைமார் குளிப்பதில்லை எனப் புலவர் புனைந்துரைக்கவில்லையா ? இது ஒருவகை நோக்கம். சம்பந்தர் வேறொரு நோக்கத்தில் பாடுகின்றார். உண்மைத் துறவில் எல்லாம் உண்மையாம்; பிற இடத்திலேயே பழி பேச இடம் உண்டு.