உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

சமணரும் புத்தரும் சைவரும் ஒருவரை ஒருவர் பொருது நின்ற வரலாறும் உண்டு. இந்த வரலாற்றினைச் சம்பந்தர் பாடல் கொண்டு அந்தக் குறுகிய அளவில் ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.

சம்பந்தர் பாடல்களை ஆராய்வதோடு அவர் வரலாற்றைப் பின்வந்தார் எவ்வாறு பாடியுள்ளார் என்றும் ஆராயவேண்டுவது ஆயிற்று. கதை கூறுவாரின் போக்கோடு ஒட்டி முதலிற் கதையை ஆராய்வதே பொருத்தமாதலின், அவ்வாறு விளக்கி உள்ளேன். ஆதலின், அங்குக் கூறுவன எல்லாம் என்னுடைய கருத்தென்று கொள்ளுதலாகாது என மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். யான் சமணன் அல்லனாதலால் சில போது நடுநிலை தவறினேன் என்று எண்ணிவிட வேண்டா. சம்பந்தர் பழிப்பது உண்மைச் சைனரை அன்று, குண்டரையே என்று காட்ட முனைந்துள்ளேன். இதனை அனைவரும் ஒவ்வாமற் போகலாம். ஆனால் என்னைச் சமணரை வெறுப்பவனாக‍க் கொள்ள இடம் இல்லை என்பதனை மட்டும் கூற விரும்புகிறேன். சம்பந்தர் குண்டரையே பழித்தாலும், அடிப்படையில் பிறரிடம் அந்நாளைய சைவர்க்கு இருந்த வெறுப்பே இவ்வாறு இரக்கமாக‍க் கலைவடிவம் பெறுகிறது. இரங்கத்தான் நாம் யார்? ஆனால், அந்நாளில் இந்த வெறுப்புக்குக் காரணம் சமயம் மட்டுமோ? பல அரசியற் சூழச்சிகளும் இங்கே இடம் பெற்றிருக்கும். அவற்றை ஆராயத்தக்க குறிப்புக்கள் இன்னும் கைக்கு எட்டவில்லை. இங்கு ஆராயப் பெறுவது சைவர் கொண்ட எரிவு மட்டும் அன்று; சமணர் முதலியோர் கொண்ட எரிவுமே ஆம்.