உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


வோடும் பெயரோடும் உளதாகின்றது. இன்னும் தாழ்த்தால் ஆவியாய் மாறி அவ்வடிவோடும் பெயரோடும் உளதாகின்றது. இவ்வாறு பொருள்கள் அழிந்தும் மாறியும் உழல்கையிலும், ஏதோ ஒரு வடிவோடும் பெயரோடும் இருத்தலால், உளதாந்தன்மை தனித்து நின்று, என்றும் விளங்குகிறது. அறிவுதான் எப்பொருளிடத்தில் இல்லை? அறிவாவது யாது? விளக்கமேயாம். பொருள்கள் அனைத்தும் நம்புலன்களுக்கோ, மனத்திற்கோ, விளங்கிக் கொண்டே எதிர்நிற்கின்றன. இன்பந்தான் எப்பொருளில் இல்லை? ஒவ்வொரு பொருளும் பயன் தருவதாய், இன்பவூற்றாய்ப் பொங்கி வழிகின்றது. எருவென இகழப்படுவதும் மருக்கொழுந்திற்கு உரமூட்டி, நறுநாற்றத்தை நாற்புறமும் வீசி நமக்கு இன்பமூட்டுகின்றது; கிழங்கையும் கனியையும் வளர்த்து, வாய்க்கினிய உணவாய் இன்பம் ஊட்டுகின்றது. மக்களின் மறலியாம் நல்ல பாம்பும் தன்னுடைய காதலிக்கு இன்பமாகின்றது. துன்பமென்ற பொருளிலுமன்றோ, இன்பம், வெள்ளமாகப் புரண்டோடுகின்றது. அதனை அறிந்த நம் பகைஞன், நமது துன்பத்தில் ஓர் இன்பம் துய்க்கின்றான். இவ்வின்ப வழியை உணராது நாம் இடர்ப்படுகின்றோம். எனவே, உண்மை அறிவின்ப வடிவான பொருள் ஒன்றே உள்ளது. ஆதலின், அப்பொருள் முழுதினையும் தன்னுட் கொள்ளவே தமிழரது கடவுட் பேராறு காவிரிக் கரையில் பரந்தெழுந்தது.