உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


அரசன் அதனைக் கண்டு, அமைச்சரை நோக்கித் “தோற்ற இவர் முன்னரே பிள்ளையாருக்கு அவரிருந்த மடத்தில் தீவைத்துத் தீங்கு செய்துள்ளார்கள்; இதுபோதும் தோற்றனர். இவர்கள் வாய் மொழிப்படியே இவர்களைக் கழுவிலேற்றிச் செங்கோல் முறையைச் செய்வித்து இனிநிறைவேற்றுக” என்றான். பகை என்பது சிறிதுமில்லாத பிள்ளையார் அது கேட்டனர் "எனக்கு மட்டும் தீங்கு செய்திலர்; சைவர் பலரையும் கொல்ல வேண்டித் திருமடத்திற்குத் தீயிட்டனர். அக்கொலையாளிகளுக்கு இது தகும். செங்கோல் முறையில் நாம் இடையிடுதல் ஆகாது" என வாளா இருந்தனர். அமைச்சரும் அவர்களைக் கழுவிலேற்றினார். அக்கழு மரம் பகைவரது தோல்வி மரமாகும்; சிவனன்றி வேறில்லை என எழுந்த கொடிமரமாகும்; பிள்ளையாருடைய வெற்றி மரமாகும்.

ஈதே திருவருண்மொழித் தேவர் கண்ட கதை. இதனைப் பின்பற்றியே திருவிளையாடற் புராணங்கள் பாடுகின்றன. பின் தொடர்ந்து பாடினாலும் கதையை முழுதும் அவை மாற்றி விடுகின்றன. அவற்றையும் சிறிது ஆராய்ந்து காண்போம். கதை முழுதும் பெரிய புராணத்தையே பின்தொடர்ந்து போவதால் விரித்து எழுதாது வேற்றுமையை மட்டும் குறித்துப் போவோமாக.

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் பாடிய வேம்பத்தூரார் என்னும் பெரும்பற்றப் புலியூர் நம்பி வெப்புத் தீர்த்த திரு