பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18

விஷப் பாம்பின் பிளந்த நாக்கைப் போல அதிகார பலமும், பணபலமுமே இன்று இரண்டு கொடிய நச்சு முனைகளாகி எந்த நியாயத்தையும் தீண்டி அழித்து விட முடிகிறது.


“எல்லாம் விவரமாகச் சொல்லி உங்களை அழைத்துப் போக வேண்டும் என்றுதான் வந்திருக்கிறோம். நீங்கள் வகுப்பை முடித்துவிட்டு அவர்களை எல்லாம் அனுப்பியபின் நான் விவரம் சொல்கிறேன்” என்றாள் தேவகி.

சித்ராவும் தேவகியும் அவன் முடித்துவிட்டு வருகிறவரை பொறுமையாகக் காத்திருந்தார்கள். ஏறக்குறைய அரை மணி நோத்துக்கு மேல் காத்திருந்தாக வேண்டியிருந்தது. கராத்தே உடையில் மின்னல் வீச்சாகப் பாய்ந்து பூமி அவர் அவர்களுக்குக் கற்பிப்பதைக் கண்கள் அகல வியப்போடு பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் சித்ரா. இரும்பாகவும், உருக்காகவும் இறுகியிருந்த அவன் உடல், திரும்பியும் பாய்ந்தும் நிமிர்ந்தும், வியர்வை மின்ன இயங்கிய துரிதகதி அற்புத மாயிருந்தது. மின்னலாகச் சுழன்றான் அவன்.

கற்றுக் கொண்டிருந்தவர்களில் இரண்டொருவர் மந்த புத்தியினால் நுட்பமான அந்தத் துரிதகதியை மட்டும் உடனே கற்க முடியாமல் திணறினார்கள். உடல் வலிமையோடு மட்டுமே தொடர்புடைய கலை என்றாலும் கராத்தே, குங்ஃபூ, ஜூடோ ஆகிய கலைகளுக்கும் மதி நுட்பத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது. மதிநுட்பமும் விரைந்துணரும் தன்மையும் இல்லாமல் அந்தக் கலைகளில் தேறவே முடியாது என்று தோன்றியது. காந்தத்தைப் போல் எதிர்ப்பட்ட