பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எங்கள் நோக்கம்


சிந்தனையிலே சிறந்து; அறிஞர் அவையிலே அளவளாவி; அன்பே உருவாகிய 'சிந்தனைச் சிற்பி மா. சிங்காரவேலரை' அறியாதார் யாருமிலர். அவர் மீன் பிடிக்கும் சமூகத்திலே பிறந்து; தேசிய இயக்கத்திலே தவழ்ந்து; ஏகாதிபத்தியத்திற்கு முதல் வைரியாகி; பாட்டாளி மக்களுக்காகப் பாடுபட்டு; பொது உடைமை கொள்கைப் பூண்டு, மக்கள் ஆட்சி மலரவேண்டுமென்று, அதற்காகத் தன்னுடைய உடல் தளர்ந்தாலும், ஊக்கம் தளராது உழைத்த நேரத்திலே மறைந்தார். புதிய உலகம் காண எண்ணிய நேரத்திலே மறைந்தார். மறைக்கப்பட்டார். மறைத்தார்கள்.

அந்த நோத்தில்தான் தென்னாட்டுப் பெர்னாட்ஷா திராவிடர்க்கோர் தளபதி, பகுத்தறிவின் பாசறை; அறிவின் சுடர்--சி. என். அண்ணாத்துரை அவர்கள்--மறைந்த மாவீரரை மக்கள் மன்றத்திலே உலவ விட்டார்.

அந்த நேரத்திலேதான் முற்போக்கு எண்ணம் கொண்டோர் அனைவரும் அவரைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். அந்தச் சிந்தனை என்றும் மாறாதவாறு அவர் எதற்காகப் பாடுபட்டாரோ, அதை அவர் பால் இரக்கங்கொண்டோர் அனைவரும் செய்து முடிப்பார் என்ற நல்ல எண்ணத்தோடு இதை வெளியிடுகிறோம் அன்பர்கள் ஆதரவு தந்து ஆதரிப்பார்களாக.

இதை நூல் வடிவில் வெளியிட அனுமதி தந்த "திரவிடநாடு" ஆசிரியர் சி. என். அண்ணத்துரை எம். ஏ. அவர்களுக்கும், இப்புத்தகம் வெளிவர உதவியாயிருந்து. அன்பர்களுக்கும், எங்களது நன்றியும் வாழ்த்துதலும் உரித்தாகுக.

சென்னை,
திருவல்லிக்கேணி
வெளியிடுவோர்:
மீன்பிடிப்போர் சங்கம்.