பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34

1973 சூன் திங்களில், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடத்தில், சிவத்திரு ஞானியார் அடிகளாரின் நூற்றாண்டு விழா ஒரு வாரம் நடைபெற்றது. விழாவில் ஒரு நாள் நீதிபதி மகராசன் தலைமை தாங்கினார். அவர் தலைமை உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்தின் நடுவே இருந்த என்னைப் பார்த்து விட்டார். உடனே பக்கத்தில் இருந்த ஒருவரைப் பார்த்து, 'அதோ சுந்தர சண்முகனார் அமர்ந்திருக்கிறாரே - அவரை இங்கே அழைத்து வா' என்றார், நான் எழுந்து அவர் பக்கம் அடைந்ததும், 'என் பக்கத்திலேயே இருக்கவேண்டும்' என்று கூறி என்னைப் பக்கத்திலேயே அமரவைத்துக் கொண்டார். இது தலைமையுரையின் நடுவிலேயே நடந்தது. மகராசன் ஐயா அவர்களின் அன்பு மழையில் நனைந்து போனேன் நான். இது, என் நூல்களால் எனக்குக் கிடைத்த சிறப்பு.

2. புதுச்சேரியில் சமரச சன்மார்க்க சங்கத்தார் கேட்டுக்கொண்டதால், சனிக்கிழமை தோறும், கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர் அருளிய 'பிரபுலிங்கலீலை' என்னும் நூல்பற்றி இப்போது தொடர் சொற்பொழிவு செய்து கொண்டுள்ளேன். இந்தத் தொடரின் தொடக்க நாளன்று, புதுவையில் தலைமை நீதிபதியாயிருந்த மாண்புமிகு எஸ். இராமலிங்கம் என்பவரும் வந்திருந்தார். எனது சொற்பொழிவு முடிந்ததும், அவர் எழுந்து, ' இவ்வளவு அரிய கருத்துகளும் வீணாய்ப் போகின்றன. சொற்பொழிவை நாடாப்பதிவு (டேப்ரிகார்டு) செய்யவேண்டும்' என்று கூறிச் சிறிது நேரம் பாராட்டிப் பேசினார். அடுத்த சனிக்கிழமை அவரே நாடாப் பதிவுக்கருவி (டேப்ரிகார்டர்) கொண்டுவந்து எனது சொற்பொழிவைப் பதிவு செய்தார். இது தொடரலாயிற்று. நீதிபதி இராமலிங்கம் ஐயா அவர்களும் என்னை அன்பு மழையில் நனையச் செய்து வருகிறார்கள்.