பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

செந்தமிழ் பெட்டகம்

துகிலுரியும் போது அவளுக்குப் புடைவைகள் சுரப்பதற்குக் காரணமானபோதும் நாராயணரே கிருஷ்ண உருவம் கொண்டவர் என்பதைக் கவி நமக்குப் புலப்படுத்துகின்றார் போர் நடக்கும்போது சிகண்டியை முன் வைத்துப் பீஷ்மரை வீழ்த்தும்படி அருச்சுனனுக்கு யோசனை கூறியும், துரோணரை மனமழியச் செய்வதற்காக அசுவத்தாமா என்ற யானை அடிபட்டுப் போனதை அப்பெயர் பூண்ட அவர் மகனே இறந்துவிட்டான் எனப் பொருள்படும்படி யுதிஷ் டிரரைப் பொய்யுரைக்கச் சொல்லியும், பூமியில் புதைந்துபோன தேர்ச் சக்கரத்தை வெளியேற்றும்போது கன்னனை அடித்து விடும்படி அருச்சுனனைத் தூண்டியும், இடைக்குக் கீழ்த் துடையிலடித்துத் துரியோதனனை மாய்க்கும்படி பீமனுக்குக் குறிப்புக் காட்டியும், இவ்விதமான உபாயங்களைக் கொண்டு பாண்டவர்கள் வெற்றி காண்பதற்குக் கிருஷ்ணரே துணை புரிகின்றார் இவ்வேளைகளில் தந்திரத்தில் தேர்ச்சிபெற்ற கபட புருஷராகவே தம்மைக் காட்டிக்கொள்ளுகின்றார்

இனி, காவிய நீதியைக் காணவேண்டுமானால் நம் கவனத்தைச் சகுனியின் சூது களத்திற்குத் திருப்ப வேண்டும். எல்லாப் பொருளையும் இழந்துவிட்ட பிறகு தம்மையும், தம் தம்பிமார்களையும், பிறகு திரெளபதியையும் பணயமாக, வைத்தாடித் தோற்கின்றார் யுதிஷ்டிரர் மாதவிடாயிலிருந்த திரெளபதியைக் கூந்தலைப் பற்றி இழுத்துச் சபை நடுவே நிறுத்துகின்றான் துச்சாதனன் ‘இவ்வடிமையின் ஆடையக் களைந்து, என் தொடையின் மேல் உட்கார்ச்சொல்’ என்று தன் தொடையைத் தட்டிக்காட்டுகின்றான் துரியோதனன் அப்பொழுது கன்னன் மனமகிழ்ச்சியுடன் கொக்கரித்துக் கூத்தாடுகின்றான்

பீஷ்மரும் துரோணரும் விதுரரும் இன்னுமுள்ள தக்கோர்களும் இதைப் பார்த்துக்கொண்டு ஒவியத்தில் உள்ள உருவங்கள்போல் வாய்மூடிச் செயலற்றுக்