பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

89


வழியறியாது திகைப்புற்று வருந்தினர். ஐம்பெரும் பூதங்களால் உளவாகும் இத்தகைய இடையூறுகளுக்கு மக்களினத்துக்கு மேற்பட்ட மறைவாக தெய்வங்களே காரணம் எனவும் தெய்வங்களின் சீற்றத்தாலேயே இத்தகைய துன்பங்கள் உலகிற் பலவிடங்களிலும் நேர்கின்றன எனவும் நம்பினர். இருளடர்ந்த காடுகளிலும் மலைகளிலும் பிறவிடங்களிலும் இருந்து மக்களை வருத்துவனவாகப் பேய், பூதம், சூரரமகளிர், நீரரமகளிர் முதலிய அணங்குகள் உள்ளனவாக நம்பியதனால் அவர்தம் முள்ளத்தே அச்சம் மிகுவதாயிற்று. இங்கனம் தொன்மை மக்களுள்ளத்திற் குடிகொண்ட அச்சவுணர்வே பேய்பூதம் பாம்பு முதலிய எல்லாவற்றையும் தெய்வமாகக்கொண்டு அவற்றால் விளையுந் தீங்கினின்றும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் அவற்றுக்குக் கள்ளும் ஊனும் படைத்து வழிபடும் சிறு தெய்வ வழிபாடுகளைத் தோற்றுவிப்பதாயிற்று.

இவ்வாறு மிகப் பழங்காலத்தே நாகரிகம்பெறாத மக்கட் குலத்தாரிடையே அச்சவுணர்வு காரணமாக நிகழ்ந்த தெய்வ வழிபாடு சிறு தெய்வ வழிபாடு எனப்படும். தமக்குப் பகையாயினார் தரும் துன்பத்தினின்றும் தம்மினமக்களைப் பாதுகாத்தல் வேண்டிப் பகைவரொடு பொருது வெற்றி தந்து மாய்ந்த தம்மினத்துத் தலைவர்களை அச்சம் நீக்கி ஆற்றல் நல்கும் தம்குல தெய்வமாகக் கொண்டு வணங்கும் வழிபாடு வீரர் வழிபாடெனப்படும். தம்மை யீன்றெடுத்து அன்பினாற் பாலூட்டி வளர்த்த தாயையும் அறிவும் ஆண்மையும் நல்கிச் சான்றோ னாக்கிய தந்தையையும் உலக வாழ்க்கையில் நேரும்இடையூறுகள் இன்னவெனவும் அவற்றைக்களைந்து இன்பம் நுகர் தற்குரிய நெறி முறைகள் இவையெனவும் அறிவுறுத்தி நல்லறிவு கொளுத்திய அறிவர்களையும் தன் நாட்டுக்குடி மக்களின் பசியும் பிணியும் பகையும் நீக்கி முறை செய்து காப்பாற்றும் வேந்தனையும் கண் கண்ட தெய்வமெனக் கருதிப் போற்றும் வழிபாடுகள் நாகரிகம் பெற்ற மக்கட் குலத்தாரிடையே அன்பு காரணமாக நிகழ்வனவாதலின் இவை அன்பு வழிபாடு எனக் கூறத்தக்கனவாகும்.