பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் நாசம் கம்பளி வேஷம் 239

வரவழைத்து, ஆகவேண்டிய காரியங்களைக் கவனிக்கும்படி ஏற்பாடு செய்யலாம். உம்முடைய தாயாரோ ஸ்மரணை தப்பிக் கிடக்கிறார்கள். இந்தச் சமயத்தில் நீர் அவர்களுக்குப் பக்கத்தி லிருந்து காப்பாற்றியே தீரவேண்டும். அதற்கு, ஒரு வக்கீல் வந்து உம்மை ஜாமீனில் விடுவிக்கவேண்டும். ஆகையால் நீர் அந்தப் பெண்ணையாவது வருவித்து, ஆகவேண்டுவதைச் செய்வதுதான் உசிதமாகத் தோன்றுகிறது. நீர் தான் அந்தப் பெண்ணோடு இதற்குமுன் பேசி நன்றாகப்பழகி இருக்கிறீரே. ஆகையால் நீங்கள் கூடிப்பேச எவ்வித ஆக்ஷேபமும் இருக்காது என நினைக்கிறேன். ஆனால், அந்தப்பெண் வருவதாக இருந்தால், இந்த ராத்திரி காலத்தில் தனியாக அழைத்துக் கொண்டு வருவது தவறு. ஸ்மரணை தப்பிக்கிடக்கும் இருவரையும் ராத்திரியில் அநாதையாகவிட்டு விட்டு அந்தப்பெண் வருவதும் ஒழுங்கல்ல. ஆகையால் அந்தப் பெண்ணை அழைத்துவர வேண்டுமானால் விடியற்காலையில்தான் அழைத்து வரவேண்டும். வக்கீலையும் காலையில்தான் அமர்த்தி உடனே மாஜிஸ்டிரேட்டினிடத்தில் அவர் போய்ப்பேசி உம்மை அழைத்துக்கொண்டு போகச்செய்ய வேண்டும். உம்முடைய தாயார் வருவதாக இருந்தால், இப்போதே வக்கீலைக் கொண்டு முயற்சித்துப் பார்க்கச் செய்திருக்கலாம். என்ன செய்கிறது? எல்லாம் தெய்வ சங்கற்பம். நீர் இன்றிரவு முழுதும் இங்கே இருக்க வேண்டும்போல இருக்கிறது. எல்லாவற்றிற்கும் நீர் அந்தப் பெண்ணை நாளைய தினம் அதிகாலையில் வரும்படிச்செய்து வக்கீலை அமர்த்தச் செய்யவும். ஆனால், இதில் நீர் இரண்டு முக்கியமான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அந்தப்பெண் இந்தப்போலீஸ் ஸ்டேஷனில் வந்து உம்மோடு பேசிவிட்டுப் போன விவரம் எவருக்கும் தெரியக்கூடாது. ஆகையால், அந்தப் பெண் எவர் கண்ணிலும் படாமல் ஒரு பெட்டி வண்டியில் ரகசியமாக வரும்படி அந்தக் கடிதத்தில் எழுதும். அதுவும் தவிர, அந்தக் கடிதம் தப்பித்தவறி வேறே யாரிடத்திலாவது போக நேர்ந்தாலும் நேரலாம். ஆகையால், நான் என்னுடைய ஜெவானை அனுப்பின விவரமெல்லாம் அதில் காட்டாமல் பூடகமாக இரண்டே வரியில் எழுதவேண்டும். நீர் தான் எழுதியி ருக்கிறீர் என்ற குறிப்பும் நிச்சயமாக அந்தப்பெண்ணுக்குத் தெரியவேண்டும்; தெரிகிறதா?" என்றார்.