பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

செளந்தர கோகிலம்



அவளது மனத்தில் ஏற்பட்ட வெறுப்பு, விருப்பம் இன்ன தென்பது எவரும் அறிந்துகொள்ளக் கூடாமல் இருந்தது.

அப்படிப்பட்ட மனநிலைமையில் அவர்கள் இருக்க, குதிரை வண்டி இரவு ஏழரைமணிக்குப் புரசைப்பாக்கம் ஹைரோட்டிலுள்ள துபாஷ் ராஜரத்ன முதலியாரது சிங்கார மாளிகையை அடைந்தது. அந்தப் பங்களா சென்னையிலுள்ள சகலமான கோடீசுவரர்களது பங்களாக்கள் எல்லாவற்றிலும் அதிக அற்புதமாகவும் சிறப்பாகவும் அழகாகவும் இருப்பதாக நெடுங்காலமாக எல்லோராலும் புகழ்ந்து கொண்டாடப்பட்ட ஒரு வன மாளிகை. அது அரை மயில் நீள அகலமுள்ள மதிட்சுவர்களால் சூழப்பெற்றதாய், உட்புறத்தில் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை என்னும் தெய்வலோகப் பெண் மயிலார் ஜலக்கிரீடை செய்து விளையாடும் இடங்களோ எனக் காண் போர் நினைத்து மயங்கத் தகுந்த தாமரைத் தடாகங்களும், மணல்கரைகளும், நறுமணம் கமழும் மலர்களும், தீங்கனிகளும் குலுங்க நிற்கும் கொடி செடி தருக்களும், இடை நடுவில் ஆகாயத்தை அளாவிப் பரவி நின்ற உப்பரிக்கைகள் நிறைந்த மாடங்களும், கூடங்களும் நிரம்பப் பெற்ற ஒப்புயர்வற்ற ரமணியஸ்தலமாக இருந்தது. அந்த வனமாளிகை ராஜ பாட்டையை அடுத்து இருந்தது. ஆதலால் பாட்டையிலிருந்து மாளிகைக்குள் நுழையுமிடத்திலிருந்த வாசற்படி இரும்புக் கம்பிகளினாலான இரட்டைக் கதவுகளைக் கொண்டதாக இருந்ததன்றி; அதன் இருபக்கங்களிலும் ஒற்றைக் கருங் கல்லினால் ஆன பெருத்த யானைகள் இரண்டு பக்கங்களிலும் வைத்து மதில்களோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. அந்த இடத்தில் கமான்போல வளைத்து விடப்பட்டிருந்த பந்தலில் சம்பங்கி, ஜாதி மல்லிகை, மனோரஞ்சிதம் முதலிய மலர்கள் நிறைந்து, நெடுந்துாரம் வரையில் பரிமள கந்தத்தை தூவிப் பரப்பின. கோகிலாம்பாளும், செளந்தரவல்லியும் யெளவன குமாஸ்தாவும் ஏறி வந்த குதிரை வண்டி அந்த வாசலண்டை வந்து சேர்ந்தது. உடனே நமது யெளவன குமாஸ்தா வண்டிக் காரனைப் பார்த்து, "வண்டிக்காரா! இதுதான் இடம்; நிறுத்து' என்றான். உடனே வண்டிக்காரன் கடிவாளவாரை இழுத்து வண்டியை ராஜபாட்டையிலேயே நிறுத்தினான். அங்கே இருந்த