உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. அடிகளாரின் படைப்புகள்

 ஞானியார் அடிகளார் பெரிய நூல் ஏதும் இயற்றவில்லை. பாடம் சொல்வதிலும் சொற்பொழிவாற்றுவதிலுமே தம் காலம் முழுமையும் செலவிட்டதால், நூல் எழுத நேரம் இல்லாது போய்விட்டது.
 சிலர் அடிகளாரை நோக்கி, 'நீங்கள் ஏன் நூல் எதுவும் எழுதவில்லை' என்று வினவியதற்கு, 'பெரியோர்கள் எழுதி வைத்துப் போயிருக்கும் நூல்களைப் படிக்கவே போதுமான மக்கள் இல்லை - இந்தநிலையில் யான்வேறு நூல் எழுத வேண்டுமா?' - என வினா எதிர் வினா விடுத்தாராம்.
 இக்காலத்தில் சொற்பொழிவுகளைச் சுருக்கெழுத்து செய்தும், நாடாப் பதிவு செய்தும் பின்னர் நூல்களாக அச்சிடுவது போன்ற வாய்ப்பு அக்காலத்தில் இல்லை போலும். இருந்தும் யாரும் அதில் கருத்து செலுத்த வில்லை போலும். இவ்வாறு அன்று செய்திருந்தால், அடிகளாரின் பெயரில் நூற்றுக் கணக்கான நூல்கள் வெளிவந்திருக்கும்.
 இத்தகைய பணியும் சிலசமயம் குறைந்த அளவில் நடைபெற்றுள்ளது. திருவோத்துார் பாதுகவி மாணவர் கழகத்தின் 12-ஆம் ஆண்டு விழாவில் அடிகளார் தலைமை தாங்கிப் பேசிய கருத்துகளின் கருத்தைப் புலவர் த. உலகநாதன் எழுதி, 'தமிழணங்கு'என்னும் இதழுக்கு அனுப்பி வெளியிடச் செய்தார். அச் சொற்பொழிவுச் சுருக்கத்தை முன்னர் ஒரிடத்தில் கண்டோம்.
 அடிகளாரிடம் பாடம் கேட்ட க.ர. ஆதிலட்சுமி அம்மையார், கந்தர் அநுபூதி திருப்போரூர்ச் சந்நிதி