பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

ஞாயிறும் திங்களும்


நடமாடும் வழியெல்லாம் நான்கு வேத
       நரிக்கூட்டம் ஊளையிட, அறிவை மாய்க்கும்
படுமூட நம்பிக்கை விலங்கு சுற்றப்,
       பஞ்சாங்க முட்புதர்கள் மொய்த்துக் காணக்
கடுநரகம் சொர்க்கமெனும் மேடு பள்ளம்
       கலக்குறுத்தத், தருப்பைஎனும் நெருஞ்சி குற்றத்
தடமேதுந் தெரியாமல் விழியி ரண்டைச்
       சமயமெனும் சாதிஎனும் புழுதிமூட,

அறியாமை இருள்பரவத், தடங்கள் தோறும்
       ஆயிரமாம் கடவுளெனும் பரல்கள் மேவத்
திருநீறு திருநாமம் என்று கூறும்
       சின்னமெனுங் கற்றாழை வளர்ந்து நிற்கத்,
தெரியாத தலையெழுத்து மறுபி றப்பு
       தீவினைகள் எனச்சொல்லும் கள்ளி காளான்
நெறியாவும் படர்ந்திருக்கக் காடாய் மாறி
       நிழல்பரப்பும் பூஞ்சோலை கெட்ட தந்தோ!

திருமணங்கள், இசையரங்கம், கோவில், இன்னும்
       தெளிதமிழில் எழுதிவந்த நூல்கள் எல்லாம்
உருவிழந்து நிலைமாறித் திரிந்து போக,
       உட்புகுந்த ஆரியமே ஆட்சி செய்ய,
அறிவிழந்தார் நெறியிழந்தார் வீரம் மிக்க
       ஆண்மையொடு தன்மான உணர்விழந்தார்
அரசிழந்தார் குறியிழந்தார் உரிமை கெட்டார்
       அடிமைஎனத் தமிழ்மாந்தர் ஆகி விட்டார்.

புகைபடிந்த ஓவியம்போல், சுவர்க ளெல்லாம்
       புழுதியடை மாளிகைபோல், கருமை கொண்ட
முகில்படர்ந்த முழுமதிபோல், அழுக்க டர்ந்து
       மூடியஓர் பளிங்கினைப்போல், மண்ணுக் குள்ளே
புகவிழுந்த பொற்சிலைபோல், பனிப டிந்த
        பொன்மலர்ப்பூஞ் சோலையைப்போல் தமிழர் நாடு
தகவிழந்து பொலிவுதரும் அழகி ழந்து
       தகதகக்கும் ஒளியிழந்து நின்ற தந்தோ!