பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிறும் திங்களும் (நன்றியுரை) என் தந்தையார் கவியரசர் முடியரசானார் அவர்கள் தந்தை பெரியாரின் தன்மானக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட நாள் முதலாய் இறுதிவரை பிறழாது வாழ்ந்தவர் என்பதும் அதுபோலவே அறிஞர் அண்ணாவையும், தலைவர் கலைஞரையும் ஏற்று இறுதிவரை அவர்களின் பேரன்பைப் பெற்றவர் என்பதும் நாடறிந்ததே. பேரறிஞர் அண்ணாவால், திராவிட நாட்டின் வானம்பாடி என்றும் தவைவர் கலைஞரால் கவிப்பெருங்கோ என்றும் போற்றிப் புகழப்பட்டவர். முதலில் அவர்களை வானளாவப் புகழ்ந்தும் பின்னர் வாய்க்கு வந்தபடி ஏசியும் வயிறு வளர்க்கும் இரட்டை நாக்குப் படைத்தவரல்லர் நம் கவிஞர். இறுதிவரை உறுதிப்பாட்டில் நழுவாமலும் கொள்கையில் வழுவாமலும் இடர்பல ஏற்பினும் கலங்காமல் வாழ்ந்து வந்த இயல்பினர். பாடல்களைப் படைக்கலனாகக் கொண்டு போராடி வந்த போர் மறவர். பண்பாடு குன்றாது தமிழக வானில் பறந்து திரிந்த வானம்பாடி தமிழை வணங்கிய தன்மானத் தொண்டர். தந்தை பெரியாரைப் பற்றியும் அறிஞர் அன்னாவைப் பற்றியும் கவிஞர் பாடிய பாடல்கள் அளவு கடந்தன. அவற்றுள் கிடைத்தவற்றைத் தொகுத்து "ஞாயிறும் திங்களும்" என்ற தலைப்பில் இந்நூலில் தரப்பட்டுள்ளன. இக்கவிதைகள் கவிஞர் அவர்கள் பல கவியரங்குகளில் தலைமையேற்றுப் பாடியவை. மற்றும் தனிப்பாடல்கள் சில. அப்பாடல்களை நுகருங்கள், அவர் எண்ணங்களை அறிந்து சரியென்று உணர்ந்தால் நிறைவேற உதவுங்கள் என வேண்டுகிறேன். இந்நூலைப் பதிப்பிக்க 1990 ஆம் ஆண்டே கவிஞரிடம் முன்னுரை பெற்றும் பல சூழல்களால் என் தந்தையின் வாழ் நாளிலேயே என்னால் பதிப்பிக்க இயலவில்லை. எந்தை இயற்கையடைவிற்குப் பிறகு வெளிவருகிறது இந்நூல். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி, ஞாயிறுக்கும் திங்களுக்கும் ஒளியேற்றிய என் தந்தை நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற கழகக் குடும்பத் தலைவரும், தமிழக முதல்வருமாகிய மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கட்கும், இனமானப் பேராசிரியரும், கல்வி அமைச்சருமாகிய மாண்புமிகு அன்பழகனார் அவர்கட்கும் என் இதயம் நிறைந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன். இந்நூல் வெளிவர உதவிய கலைஞர் தமிழ்ச்சங்கச் செயலாளரும் கவியரசர் முடியரசன் அவைக்களத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மு.தென்னவன் அவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். 19, 3ஆம் வீதி, அன்பன் காந்திபுரம், காரைக்குடி - 630 001. மு. பாரி