பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கா. சி. வேங்கடமணி

1920 ஆம் ஆண்டுகளில் ஒரு பெயர் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அந்தப் பெயர் கா.சி. வேங்கடரமணி. தஞ்சை மாவட்டம் பூம்புகாரில் பிறந்தவர். கிராமத் தொண்டும் உழவுத்தொழிலும் முக்கியமென்று வற்புறுத்த எழுதிய நாவல்கள் ‘முருகன் ஓர் உழவன்’ ‘தேசபக்தன் கந்தன்’. முதலில் இந்த நாவல்களை அவர் ஆங்கிலத்தில் தான் எழுதினார். ஆங்கிலத்தில் எழுதினாலும் நாவலில் வலம்வந்த மாந்தர்கள் தஞ்சையில் வாழ்ந்த விவசாயிகள். ‘முருகன் ஓர் உழவன்’ நாவலை கி. சாவித்திரிஅம்மாள் தமிழில் மொழிபெயர்த்தார்.

ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டு இருந்த கா.சி. வேங்கடரமணி தமிழிலும் எழுதத் தொடங்கினார். முதலில் சிறுகதை எழுதும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ‘தேசபக்தன் கந்தன்’ என்ற நாவலை அவரே தமிழிலும் எழுதினார். இவர் எழுதிய நாவல்களில் தேசியமும் தேசியஇயக்கமும் பின்னிப்பிணைந்து நின்றன. இவர் தான் முதல் முதலில் தேசிய இயக்க நாவல் எழுதியதாக க.நா. க. குறிப்பிடுகிறார். இந்திய இலக்கியத்தில் பிரதானமாகப் பேசப்பட்ட எழுத்தாளர்களான முல்க்ராஜ் ஆனந்த், ஆர்.கே. நாராயன் போன்றவர்கள் இவருக்குப் பின்னர் எழுதத் தொடங்கினவர்களே.

‘வ.வே.சு ஐயரும், மாதவய்யாவும் எழுதிய காலத்திலேயே ‘தமிழ் உலகு’ என்ற பத் திரிகையில் நாவலாசிரியராகப் பாராட்டப்பெற்ற கா.சி. வேங்கடரமணி சிறுகதைகளையும் எழுதி புகழ்பெற்றதாக சிட்டி சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள்.

இந்த கா.சி. வேங்கடரமணி சிறுகதையில் பெரியதாக ஒன்றும் சாதித்து விடவில்லை என்று சொல்லுபவர்கள் கூட இவர் எழுதிய முருகன், கந்தன் இரண்டு நாவல்களும் கலை, உருவப் பிரக்ஞையுடன் எழுதப்பட்டுள்ளன என்று ஒரு முகமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.