பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

சோலை சுந்தரபெருமாள்


பெண்ணோடு பழகுவதை டெஸ்ட் ட்யூப் சோதனையாய்க் கொண்டிருக்கிறாயோ? இது ஒரு அனுபவம் என்பாயோ. என்னைப் பற்றி ஒரு கதை எழுதிவிட்டு அதற்குக் காசு வாங்கி மறந்து போவாயோ. நான் உனக்கு டெஸ்ட்ட்யூபா? அமிலக் கரைசலா? ஆராய்ச்சிப் பொருளா? இல்லை. நிஜமாகவே உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா? என் பேச்சு உனக்கு ரசிக்கிறதா?- இந்த லூக்கோடர்மா உனக்கு ஒரு விஷயமே இல்லையா? எங்க அம்மாவுக்கும் லூக்கோடர்மா இருந்தது. உன்னைப் பார்க்கிற போதெல்லாம் என் அம்மா ஞாபகம் வருகிறது. இப்படி ஏதாவது கயிறு திரித்துச் சாட்டையாக்கிக் கடைசியாய் விளாசப் போகிறாயா?

ச்சீ— எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு அவலம் வாய்க்கவேண்டும். வெந்தும், வேகாததுமாய் ஒரு முகம் கிடைக்க வேண்டும். நான் கரிக்கட்டையாய் கிருஷ்ண நிறமாய் இருந்திருக்கக் கூடாதா. புருவத்துக்குத் தீட்டின மையை எடுத்துக் கன்னத்து வெள்ளையில் தீட்டினேன். கொஞ்சம் வழித்து இடக் கன்னத்தில் தேய்த்தேன். இன்னும் இரண்டு விரல் எடுத்து முகவாயில் நெற்றி மேட்டில் கழுத்து வளைவில் முகம் முழுக்க கறுப்பாய் கரிக்கட்டையாய் கிருஷ்ண நிறமாய் அப்பா இந்தக் கறுப்பு எத்தனை அழகு! லூக்கோடர்மா இல்லாத என் முகம் எத்தனை எடுப்பு!

வாசல் பக்கம் நிழலாடிற்று. காலை ஏழு மணிக்கு யார் வரப் போகிறார்கள்?

“மே ஐ கம் இன்-?” பத்ரி. பளிரென்று ஒரு பயமும், சந்தோஷமும் வயிற்றில் வெடிக்க “யெஸ் கம் இன்.” ஐயோ மூஞ்சியெல்லாம் மை! பொத்திக்கொண்டு அறைக்கு ஓடுகையில் எதிரே நின்றுவிடுகிறார்.

“ஏய் என்ன இது கரி வேஷம்?” .

நிமிர்ந்து அவர் கண்களைச் சந்திக்கையில் வெட்கமும் அவமானமும், விசும்பலுமாய் அவசரமாய் அழிக்க முற்படுகையில், நித்யா, உனக்கென்ன பைத்தியமா!” என்கிறார். “உன்னைக் கெட்டிக்காரின்னு நெனைச்சேன். அசடே கண்களை மூடிக்கொண்டால் இருட்டாகிவிடுமா? கறுப்பைத் தீத்திக் கொண்டால் எல்லாம் போய்விடுமா? கண்ணாடி சொல்கிற அழகா முக்கியம்? வெறும் நிலைக் கண்ணாடிப் பொண்ணா நீ? நிஜத்தை மறுக்காதே நித்யா பாவம், கோழைத்தனம். அழகு என்பது உருவமா? வெளித் தோலா? இல்லை நித்யா. அது மனசு கேட்காமல் உதவி பண்ணுகிற உன் மனசு, பதில் நன்றிக்குக் கட்டிக் காத்துக் கொண்டிராமல் நகர்ந்து போகின்ற உன் குணம். சின்ன வேலையைக்கூட மாக்கோலம் போடுகிற அழகாய்ச் செய்து முடிக்கிற பழக்கம். அழுவதை நிறுத்து