பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

686

பகுத்தறிவு பகலவன் தந்தை



இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாள் விழா நடக்க விடுவோமா என்று ஜனாதிபதி ஆட்சி (உண்மையில் பி.கே. தவே-ஆர். வி, சுப்ரமணிய அய்யர் ஆட்சி) சவால்விட்டது போல், 1976 செப்டம்பர் 16ந் தேதியே ஈ. வெ. ரா. மணியம்மையாரையும், புலவர் கோ. இமயவரம்பன் போன்றாரையும் கைது செய்து, சிறையிலடைத்தது. பெரியார் திடலில் யாராவது வந்து பெரியார் நினை விடத்தில், மலர் மாலைகளோ, மலர் வளையங்களோ வைத்து "அசிங்கம்" செய்து விடுவார்களோ என ஆட்சியாளர், இரண்டு மூன்று நாள் அந்தப் பக்கம் யாரையும் விடவில்லை! ஏற்கனவே இடுப் பொடிந்த என்.எஸ். சம்பந்தம் மாத்திரம், மிசாவில் உள்ளே இருந்தால் பழிவருமோ என்ற அச்சத்தால் வெளியே விடப்பட்டுப், பெரியார் திடலில் தனியாளாய் இருந்து வந்தார். மணியம்மையாருக்கு 3 நாள் சிறைவாசம் போது மென்று அனுப்பிவிட்டனர்.

1977 பிப்ரவரியில் பொதுத் தேர்தல்கள் பிறந்தன. சிறைக் கதவுகளும் திறந்தன. நாடாளுமன்றத் தேர்தல்களில் வடபுலத்தில் காங்கிரஸ் வேரொடும், வேரடி மண்ணோடும் களைந்தெறியப்பட்டது! சுதந்திரத்திற்குப் பின் காங்கிரசல்லாத ஆட்சி, மத்தியில் ஜனதா அரசாக மலர்ந்தது மகத்தான புரட்சியாகும். அதன் பின்னர், மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல்கள். தமிழகத்தில் அசாதாரண நிலை. திடீரென்று, திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எதிர்பாராத சிலர் பிரிந்து சென்று, மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்றனர். சிற்சில நாட்களிலேயே, முன்னர் தமிழ் தேசியக் கட்சி என ஒன்று, காங்கிரசில் ஐக்கியமானதுபோல், மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து கொண்டது!

8.5.1977 அன்று தென்னார்க்காடு மாவட்டச் சார்பில் மணியம்மையாரின் வீரமிகு வெற்றிகளைப் பாராட்டு முகந்தான், கலைஞர் அவர்களால், அம்மையாருக்கு வெள்ளிவாள் கடலூரில் பரிசு வழங்கப்பட்டது.

தமிழ் நாட்டில் புதிய நிலைமை உருவாயிற்று. அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மை பெற்று. மாண்புமிகு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைத்தது. 1967 முதல் ஆளுங்கட்சியாக விளங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், கலைஞர் தலைமையில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கியது.

1977 செப்டம்பர் 17ல் பெரியாரின் 97வது பிறந்த நாள் விழா, பரவாயில்லை ; பயமின்றி மூச்சுவிட முடிந்தது. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். முன்னர் பெரியாரிடம் கேட்டுக் கொண்டவாறு, இரண்டு மூன்று ஆண்டுகட்கு முன்னர் 17.9.74 அன்று அண்ணா மேம்பாலத்தருகில் அமைத்து வைத்திருந்த பீடத்தின்மீது, நிற்கும் நிலையிலுள்ள