பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

களுக்குத் தெரிவித்து எடுத்துக்கொண்டு செல்லுமாறு கூறுவார்கள். ஆனால் ஏதேனும் விபத்துக்குள்ளாகி அடிபட்டுச் சாகும் நிலையிலிருக்கும் கால் நடைகளைத் தங்களிடம் கூலிவேலை செய்பவர்களுக்கு விற்றுவிடுவார்கள். அதற்கு ஈடாகச் சிறுதொகை பெற்றுக்கொள்வர். மலையாளிகளில் சிலர் சிறந்த மாட்டு வைத்தியர்களாக விளங்குகின்றனர். இவர்கள் மாட்டின் ஒடிந்த எலும்பை மிக விரைவில் கூடுமாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள், பசுமாட்டின் தோலை அவர்கள் தொடுவது கூடக் கிடையாது. உழவுத் தொழிலுக்குப் பயன்படும் பொருள்களையும் அத்தோலினால் செய்வதில்லை. இறந்துபோன பசுவின் தோலைக்கூடத் தாங்கள் உரிமையாக்கிக் கொள்ள விரும்புவதில்லை. அப்பிணத்தை எடுத்துச் செல்லும் அரிசனங்களுக்கே கொடுத்து விடுவர். மலையாளிகளும் பெண்களும் மிகுதியாகப் புகைப் பிடிக்கும் பழக்கமுடையவர்கள்.

குறிஞ்சி நிலங்களில் வாழும் இம் மலையாளிகள் பல்வேறு காரணங்களால் சமவெளியிலுள்ள மக்களோடு தொடர்பின்றி வாழ்ந்து வந்தனர். மலைபடு பொருள்களைக் கொண்டே தங்கள் இன்றியமையாத தேவைகளைத் தீர்த்துக்கொண்டு வாழ்ந்து வந்தனர், முன்னேற்றத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை. ஆனால் நம் நாட்டு அரசியலார், இவர்களுடைய முன்னேற்றத்திலும் இப்பொழுது கருத்துச் செலுத்துகின்றனர். நல்ல மலைப்பாதைகள் கொல்லி மலைமீது இப்போது அமைக்கப்பட்டுள்ளன. குடியிருப்புக்கான வீடுகளும், கல்விவசதிக்கான பள்ளிகளும் இப்பொழுது நிறையக் கட்டப்பட்டுள்ளன. மருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில திங்கள்களில் உந்து வண்டிகளும் இம்மலையின் மேல் விடப்படும். பழமையான வழக்கங்களின் பிடியிலிருந்து இவர்கள் இப்போது நீங்கி வருகின்றனர்.