பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9



காட்டாற்றில் புதுவெள்ளம் வருகிறது. அதில் ஆடி மகிழத் தோழியரோடு செல்லுகிறாள் தலைவி. புதுப்புனலில் பாய்ந்து நீந்தி விளையாடுகிறாள். நெடுநேரம் புனலில் விளையாடியதால் அவள் கால்கள் சோர்ந்துவிடுகின்றன. தாமரை மலர்போலும் ஒளி வீசும் அவளுடைய கண்களும் சோர்ந்துவிடுகின்றன. ஆற்று வெள்ளம் அவளைத் தன்னோடு அடித்துக் கொண்டு செல்லுகிறது. அப்போது அவ்வழியே வந்த கட்டிளங் காளையொருவன், தலைவியின் துன்ப நிலையைக் கண்டு ஆற்றில் பாய்கிறான். தன் மார்பில் அணிந்துள்ள புன்னைமலர்மாலை நீரில் அலையுமாறு நீந்திச் சென்று அவளைப்பற்றித் தன் மார்பு அவளுடைய மார்போடு பொருந்துமாறு அணைத்துக் கொண்டு வந்து கரைசேர்த்துக் காப்பாற்றுகிறான். அப்பாடல் பின்வருமாறு:

“காமர் கடும்புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
தாமரைக் கண்புதைத்து அஞ்சித்தளர்ந்து அதனோடு ஒழுகலால்
நீள்நாக நறும் தண்தார் தயங்கப்பாய்ந்து அருளினால்
பூண் ஆகம் உறத்தழீஇப் போதந்தான் அகன்அகலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால் என்தோழி
அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே!”

இன்ப அனுபவம் ! இத்தகைய அனுபவம், வாய்க்குமானால், நாள்தோறும் பெண்கள் காட்டாற்றில் விழத்தயங்குவாரோ! மற்றாெரு குறிஞ்சி நிலத்தலைவி ஊசலாடி மகிழ்ந்த சிறப்பை அவள் வாயிலாகவே கேட்போம். தலைவி தோழியிடம் கூறுகிறாள் தன் காதல் இன்பத்தை.

“ தோழி! நம் தினைக்கொல்லைக்கு அருகிலிருக்கும் ஊசலில் அமர்ந்து ஒருநாள் ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது ஓராணழகன் அவ்வழியே வந்தான். அவன் கட்டழகு என் கண்களை ஈர்த்தது. அவன், காணாமல்