பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149

ஒரு குடிசை அமைத்து, அதில் அப்பெண்ணைக் குடியேற்றுகின்றனர். ஒரு கயிற்றின் நுனியில் தீயைப் பற்றவைத்து, அத்தீயினால் தன் இடுப்பின் இருபுறங்களையும் அப்பெண்ணையே சுட்டுக் கொள்ளச் சொல்கின்றனர். ஒரு திங்கள் அக்குடிசையில் இருந்தபிறகு, பல சடங்குகளோடு அப்பெண் வீட்டிற்கழைக்கப்படுகிறாள்.

ஏழாவது திங்களில் மறுபடியும் ஒரு சடங்கு நடைபெறுகிறது. இச்சடங்கு மிகவும் முக்கியமானது. இதற்கு 'வில்லம்புச் சடங்கு' என்று பெயர். கருவுற்ற பெண்ணும், வயிற்றில் உள்ள குழந்தைகளுக்குரிய தந்தை என்று அவளால் குறிப்பிடப்பட்ட கணவனும், மண்டுவிற்கருகிலுள்ள ஷோலாவிற்குச் செல்லுவார்கள். கணவன் மரத்திலிருந்து குச்சியை ஒடித்து முக்கோணமாக வைப்பான். அதன் நடுவில் ஒரு விளக்கு ஏற்றப்படும். பிறகு கணவனும் மனைவியும் வேறொரு குச்சியை ஒடித்து வில் செய்வார்கள். ஒரு புல்லினால் அம்பு செய்வார்கள். பிறகு தம் உறவினரை வணங்குவார்கள், வில்லைக் கையிலேந்திய வண்ணம் அப்பெண் எரியும் விளக்கை ஒருமணி நேரமோ, அணையும் வரையிலோ பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

பிறகு அம்மண்டுவிலுள்ள எல்லாரும், அவ்விடத்திலேயே உணவு சமைத்து உண்டுவிட்டு, அவ்விரவை அவர்களோடு கழிப்பர். ஒரு பெண் முதல் தடவையாகக் கருவுறும் போதோ, புதிய ஒரு கணவனை அக் குழந்தையின் தந்தையாகத் தேர்ந்தெடுக்கும் போதோ இச்சடங்கு நடைபெறும். திருமணமில்லாமலோ, குழந்தையில்லாமலோ ஒருபெண் இறந்தால், சுடுகாட்டில் திருமணச் சடங்கும், வில்லம்புச் சடங்கும் நடை பெறும். குழந்தை பிறந்தவுடன் அப்பெண் மறுபடியும் மண்டுவிற்கு வெளியிலுள்ள அக்குடிசைக்கு அனுப்பப்படுகிறாள். அக்குடிசையில் மூன்று வாரங்களோ