பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

159

லாம் எரிந்த பிறகு, சிதையை முன் போலவே நீர் ஊற்றி நனைப்பார்கள். எல்லாரும் அவ்விரவை இடு காட்டிலேயே கழிப்பர். இத்துடன் கோதர்களின் இறுதிச்சடங்கு முடிவுறுகிறது.

பிற செய்திகள் :

தோடர்களிடையே இருப்பது போன்று ஒரு பெண் பல கணவரை ஏற்றுக்கொள்ளும் முறை கோதர்களிடையே இல்லையென்றாலும், அதனின்றும் சிறிது மாறுபட்ட ஒருமுறை இவர்களிடையே நிலவி வருகின்றது. ஒரு குடும்பத்தில் பல சகோதரர்கள் இருந்தால், ஒருவன் மற்றவனுடைய மனைவியோடு எந்தவித வேறுபாடுமின்றித் தொடர்பு வைத்துக் கொள்வது வழக்கம். இதை அவர்கள் குற்றமாகக் கருதுவதில்லை. இதன் காரணமாகப் பொறாமையோ, பூசலோ ஏற்படுவதில்லை. கோதர்களிடையே உடன் பிறந்த ஒற்றுமை மிகவும் அதிகம். அவர்களுடைய சமூக, பொருளியல் முறைகளெல்லாம், சோதர ஒற்றுமையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. 'உடன் பிறந்தார் இல்லாதவன் கையிளைத்தவன்' என்ற ஒரு பழமொழி அவர்களிடையே நிலவுகிறது. மது அருந்துவதிலும், அபினி தின்பதிலும் இவர்களுக்குப் பெருவிருப்பம் உண்டு.

குறும்பர் :

இவர்களைக் குறுமர் என்றும், குறுபர் என்றும் வேறு பெயர்களால் அழைக்கின்றனர். இவர்கள் நீலகிரிப் பீடபூமியிலுள்ள சிற்றூர்களிலும், வய நாட்டிலும் வாழ்கிறார்கள். இம்மக்கள் குறும்பர், ஊர்க்குறும்பர், ஜேன் குறும்பர் என மூன்று பிரிவினராகப் பிரிந்து வாழ்கின்றனர். நீலகிரிப் பீடபூமியில் குறும்பர்களும், நெல்லியாளத்தை (Nellialam)ச் சுற்றி ஊர்க்குறும்பர்களும் வாழ்கின்றனர். ஜேன் குறும்பர்கள், 'ஷோலா