பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

181

எல்லாருக்கும் தெரியும்படி இச் சிகரத்தில் பதித்து வைத்தானாம். இக் காரணங்களாலேயே இச்சிகரம் இப் பெயர் பெற்றதாகத் தோடர்கள் கூறுகின்றனர்.

குன்று வெளிகள் :

உதகமண்டலத்தைச் சுற்றிப் பரந்த குன்று வெளிகள் (downs) அமைந்துள்ளன. வேறு எந்தக் குறிஞ்சி நகரத்திலும் இங்கிருப்பன போன்று பரந்த வெளிகளைக் காண முடியாது. உந்துவண்டிகளில் ஏறி உல்லாசமாகச் சுற்றித் திரிய விரும்புவோர், இணையற்ற இன்பம் காண இவ்வெளிகள் பெருந்துணை புரிகின்றன. உதகமண்டலத்தைச் சுற்றியுள்ள பாதைகள் அமைப்பிலும், அழகிலும் ஈடற்றவை, வேறெங்கும் இத்தகைய மலைவழிப் பாதைகளைக் காண முடியாது. மகாபலேசுவரம் (Mahabaleshwar), மாதெரன் (Matheran) ஆகிய நகரங்களில் இருப்பதுபோல், உதகையைச் சுற்றி உயர்ந்த மலைகளும், குறுகிய பள்ளத்தாக்குகளும் கிடையா. மைசூரிலிருந்து கூடலூர் வழியாக உதகை செல்லும் பாதை. அழகிய வெளிகளிடையே புகுந்து செல்லுகிறது. இவ்வழிச் செல்வோர் எய்தும் இன்பம் எடுத்தியம்பற்பாலதோ?

இவ்வழி தாழ்ந்த குன்றுகளில் ஏறி இறங்கிச் செல்லுகிறது. அங்குப் பரவிக் காணப்படும் பசும் புல்வெளிகள், இங்கிலாந்து நாட்டில் மிக்க அழகோடு விளங்கும், யார்க்ஷைர் புல்வெளிகளை (Yorkshire Moors) நினைவூட்டுகின்றன. இவ்விடம் குழிப் பந்தாட்டத்திற்கு மிகவும் ஏற்ற இடமாக விளங்குகிறது. இங்குள்ள குழிப்பந்தாட்ட மைதானம் (Golf Course) இந்திய நாட்டிலேயே மிகவும் அழகியது. இவ்வெளிகளில் அமைந்துள்ள இளமரக்காடுகளில் செம்புலி (leopards) களும், சிறுத்தை (Panthers) களும், வரையாடுகளும் நிறைய உள்ளன. இவைகளை வேட்டையாடுவது, உதகை வாழ் மக்களுக்குச் சிறந்த பொழுது