பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

205

வேண்டியபோது பணங்கொடுத்து அவர்களைக் கடன்காரர்களாக்கி, பிறகு அவர்கள் நிலங்களையும் பறித்துக் கொண்டனர். இக்கீழ்ப் பகுதியானது மலேரியா நோய்க்கு இருப்பிடம் என்று சொல்லலாம். மார்ச் முதல் ஜூலை வரை இங்கு வாழும் மக்கள் காய்ச்சலால் தாக்குண்டு பெரிதும் வருந்துகின்றனர், ஆனால் மற்ற திங்கள்களில் காய்ச்சல் வராது என்று சொல்ல முடியாது.

மேல் பழனிமலை 6000 அடி முதல் 8000 அடி வரையில் உயர்வுள்ளது. பழனி மலையில் மிகவும் உயர்ந்த சிகரம் வெம்பாடி ஷோலா மலை என்பதாகும். இது மதுரை மாவட்டத்திலுள்ள எல்லா மலைச்சிகரங்களையும் விட உயர்ந்தது என்றே சொல்லலாம். இதன் உயரம் 8218 அடி. குறிஞ்சி நகரமான கோடைக்கானல் இம் மேற்பழனியின் தென்பாகத்தில் அமைந்துள்ளது. கீழ்ப்பழனியில் பரவியுள்ள அடர்ந்த காடுகளை இங்குக் காணமுடியாது. நிறைந்த பள்ளத்தாக்குகளும் இங்குக் கிடையா. வெப்ப நிலையும் குளிர்ந்து தோன்றும். பயிர்த் தொழிலுக்குப் பயன்படாத நிலம் இங்கு அதிகம். இங்குள்ள பீடபூமிகளில் முரட்டுப் புல் முளைத்த பரந்த வெளிகள் (Downs) மிகுந்து தோன்றும், ஒரு சில பள்ளத் தாக்குகளில் மக்களின் குடியிருப்புகளைச் சுற்றி உதகமண்டலத்தில் இருப்பவற்றைப் போன்று இளமரக்காடுகள் (Sholas) நிறைந்திருக்கும். இப் பள்ளத்தாக்குகளைத் தவிர மற்ற இடங்களிலுள்ள நிலங்களெல்லாம், புல் செத்தை அடர்ந்த மெல்லிய மண்படலத்தால் மூடப்பட்டிருக்கும். அப்படலத்தினடியில், மஞ்சள் நிறமான களிமண் நிலம் அமைந்திருக்கும். அக் களிமண்ணிற் கடியில் பரவியுள்ள கற்பாறைகள், எங்குப் பார்த்தாலும் தலை நீட்டிக்கொண்டிருக்கும்.

பழனிமலை மீதுள்ள சரிவு வடக்கு நோக்கிப் படிப்படியாக இறங்குகிறது. ஆனால் தென்பகுதியோ மிகவும் செங்குத்தான பாறைகளையும் சரிவுகளையும்