பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

குறிஞ்சி ஆண்டவன் பெயராலேயே வழங்குகிறது. 'முஞ்சிக்கல்'லில் மாரியம்மனுக்கும் விநாயகனுக்கும் கோவில்கள் உள்ளன. வேறு பல சிறு தெய்வங்களின் கோவில்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன. தேநீர் விருந்துகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் மாலை நேரங்களில், காது செவிடுபடும்படி பறையடித்தும், மருள் கொண்டு ஆடிக்கொண்டும், மாரியம்மனை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு 'சாரிங் கிராஸ்' வழியாகத் தமிழ் மக்கள் திரளாகச் செல்லும் காட்சி ஐரோப்பியருக்கு வியப்பூட்டும் புதுமையாகத் தோன்றலாம்.

இங்குக் கிருத்தவ சமயத்தைச் சார்ந்த பல பிரிவினரும் கோவில்கள் எழுப்பியுள்ளனர். கோடைக்கானலைச் சுற்றியுள்ள மலைகளின் மீது பல ரோமன் கத்தோலிக்கக் கோவில்கள் அமைந்துள்ளன. ப்ராடெஸ்டண்ட் கிருத்தவர்களில் நான்கு பிரிவினர் (தங்களைப் பிரிந்த சகோதரர்கள்-Our Devided Brethren என்று அழைத்துக் கொள்கின்றனர்) இங்கு வாழ்கின்றனர். செயின்ட் பீடர் சர்ச்சும், யூனியன் சர்ச்சும், லாச் எண்டு என்ற இடத்தில் அமைந்துள்ள அமெரிக்க மிஸ்ஸெனரி சர்ச்சும், ஸ்வீடிஸ் குடியேற்றத்திலுள்ள ஜூபிலி சர்ச்சும் இவர்கட்கு உரிமையானவை. லீப்சிக் எவேஞ்சலிகல் லூதரன் மிசன், ஹெர்மன்ஸ்பர்க் மிஷன் என்ற இரு ஜெர்மானியக் கிருத்தவ சமயத்தைச் சார்ந்த மக்களும் இங்கு வாழ்கின்றனர்.

தூங்கும் இளவரசி :

“இளவரசன் தன் அன்புக் கரங்களால் ஆரத்தழுவித் துயிலெழுப்பும் வரையில், கோடைக்கானல் தூங்கும் இளவரசியாக விளங்கினாள்“ என்று கோடைக்கானலில் வாழ்ந்த 'மெட்ராஸ் டைம்ஸ்' பத்திரிகையின் நிருபர் கி. பி. 1894-ஆம் ஆண்டு எழுதினார். ஆம்! உதகமண்டலத்தைக் குறிஞ்சி நகரங்களின்