பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௯. பாட்டியற்றுவோர்

தமிழிசைப்பாட் டியற்றுபவர்
    தமிழர்களாய் இருந்தால்தான்
        தமிழ்த்தென் பாங்கில்
அமைவுபெறும்! பார்ப்பனனும்
    தமிழறிவுக் கயலானும்
        அமைக்கும் பாடல்,
அமுதொத்த தமிழின்மேல்
    எட்டியையும் வேம்பினையும்
        அறைத்துப் பூசித்
தமிழர்க்கே தமிழ் என்றால்
    தனிக்கசப் பென் றாக்கிவிடும்
        தானும் சாகும்! 91

மனமேஈசனின் நாமம்
    வாழ்த்துவாய் எனும் வேத
        நாயகன் தன்
இனிதான பாடலைப்போல்
    திருடுவதற் கில்லை யெனில்
        இங்கோர் பார்ப்பான்
தனதாய் ஒன்றுரைப்பான் அத்
    தமிழ்ப்பாட்டில் தமிழுண்டோ ?
        எள்ளின் மூக்கத்
தனையிருப்பின் இரவுதனை
    “ரா” என்றே சாற்றியிருப்
        பான்அப் பாட்டில்! 92

செந்தமிழில் அன்புடையார்
    சிலபார்ப்பார் இருந்தாலும்
        அவரை, மற்றச்
செந்தழற்பார்ப் பார்கெடுக்கப்
    பார்ப்பார் இத்தமிழ்வாழப்
        பாரார் அன்றோ!
அந்தமிழால் உடல்வளர்ப்பார்
    ஆரியந்தான் தமதென்பார்.
        ஆரியத்தில்
இந்தவரி என்னஎனில்
    யாம்அறியோம் எம்பாட்டன்
        அறிந்தான் என்பார் 93