பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧0. சொற்பொழிவாளர்

மற்போர்க்கே அஞ்சிடுவோம்
    ஆயினும்யாம் வண்மைமிகு
        தமிழர் நாட்டில்
சொற்போருக் கஞ்சுகிலோம்
    என்றாராம் ஒரு முதியார்
        அவர்க்குச் சொல்வேன்
கற்போரின் பகுத்தறிவைக்
    கவிழ்க்கின்ற ஒழுக்கமிலாக்
        கதையைத் தாங்கி
நிற்பாரும் நிற்பாரோ
    நின்றாலும் வீழாரோ
        நெடுங் காலின்றி? 96

சமயமெனும் சூளையிலே
    தமிழ்நாட்டால் முளையாதென்
        றறிந்தி ருந்தும்
சமயநூல் அல்லாது
    வழியறியாத் தமிழ்ப்புலவர்
        சமயம் பேசித்
தமிழ் அழிப்பார் எனினும் அவர்
    தமிழ் வளர்ப்போம் என்றுரைத்துத்
        தமை வியப்பார்.
தமிழ் வளர்ச்சி தடைப்பட்டால்
    தம்வளர்ச்சி உண்டென்றும்
        நினைப்பார் சில்லோர்! 97

பணமனுப்பி வாரிர் எனில்
    பயணமுறும் தமிழ்ப்புலவர்
        ஊரில் வந்து
மொண மொணெனக் கடவுளரின்
    முச்செயலில் பொய்ப்பேச்சில்
        முழுக வைப்பார்
கணகணெனத் தமிழ்க்கல்வி
    கட்டாயம் செயத்தக்க
        கருத்தும் சொல்லார்
தணியாத சமயமொடு
    சாதியெனும் தீயில் நெய்யைச்
        சாய்த்துச் செல்வார். 98