பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை

தமிழ் மொழியிலே உலகிலுள்ள சமயங்கள் அனைத்தையும் சார்ந்த இலக்கியங்கள் குவிந்திருக்கக் காண்கி றோம் அந்த வகையிலே. இந்தியாவுக்கு வந்த இஸ்லாமிய சமயமும் தமிழ் இலக்கியக் களஞ்சியத்திற்குக் காணிக்கை கொடுத்திருக்கிறது.

கலைமாமணி மணவை முஸ்தபா அவர்கள் இஸ்லா மிய சமயம் தந்த இலக்கியங்களைப் பற்றி ஆய்வு நடத்தி, "தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்" என்னும் நூலை உருவாக்கி, தமிழ் இலக்கியக் களஞ்சியத்தில் சேர்த்துள்ளார்.

இஸ்லாமிய இலக்கியங்களை ஆராயும் இந்த நூலே தரத்திலும் திறத்திலும் ஒரு தனி இலக்கியமாக விளங்குவதைப் பார்க்க முடிகிறது.

சமய ரீதியான ஆராய்ச்சி என்பது மிகவும் எச்சரிக்கையோடு தொட வேண்டிய விஷயமாகும். ஆம்: ரோசா மலரைத் தொடுவது போன்று தொடவேண்டும். ஆனால், தமிழ்மொழி அனைத்துச் சமயத்தினருக்கும் சொந்தம் என்ற உண்மையை உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு ஆய்வோர் பீடு நடை போட முடியும்.

திரு. மணவை முஸ்தபா அவர்கள் இந்த நூலை மிகவும் நல்ல முறையில் படைத்திருக்கிறார். தன் மதத்திடம் அழுத்தமான பற்றுடையோர்தான், அம்மதத்தைச்சேர்ந்த இலக்கியங்களை நுணுகி ஆராயத் தகுதி பெற முடியும். திரு. மணவை முஸ்தபா அத்தகைய தகுதி தனக்கு உண்டு என்பதை இந்நூலில் பக்கத்திற்குப் பக்கம் நமக்கு உணர்த்தியிருக்கிறார்.

ஆசிரியர் முஸ்தபாவின் உள்ளத்தை நான் நன்கறிவேன். அவர் இஸ்லாமிய இலக்கியங்களில் ஆய்ந்து தோய்ந்து, அவற்றின் வடிவங்களை நமக்குக் காட்ட இந் நூலின் மூலம் முயன்றிருக்கிறார்.