பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168


இதே போக்கில் அமைந்த மற்றொரு படைப்போர் இலக்கியம் காளை அசனலிப் புலவர் இயற்றிய ‘ஹூசைன் படைப்போர்’ ஆகும். படிப்போர் நெஞ்சை உருகச் செய்யும் சம்பவங்கள் நிறைந்த இவ்விலக்கியத்தின் சந்தம் சில சமயங்களில் படிப்போரின் கண்களைப் பனிக்கச் செய்து விடும் தன்மையுடையனவாக அமைந்துள்ளன.

அடுத்துக் குறிப்பிடத்தக்க மற்றொரு படைப்போர் இலக்கியம் ‘மலுக்கு முலுக்கு படைப்போர்’ நூலாகும். இந்த இலக்கியத்தைப் படைத்தவர் தமிழ் இஸ்லாமிய இலக்கிய உலகில் யாராலும் மறக்க முடியாத அளவுக்கு பலப்பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுப் பெருமை தேடிக் கொண்ட கண்ணகுமது மகுதூம் முகம்மதுப் புலவராவார். இவர் சுமார் நாற்பது ஆண்டுகளில் அறுபதுக்கு மேற்பட்ட இஸ்லாமிய நூல்களைப் பாடபேதம் திருத்திப் பதிப்பித்துள்ளார். இத்தகு பெரும் பணியாற்றிய இவர், எழுதிய குறிப்பிடத்தக்க நூல் ‘மலுக்கு முலுக்குப் படைப்போர்’ ஆகும்.

மற்றும், கொழும்புவைச் சோந்த அ.வெ. அமீது என்பார் இயற்றிய இபுலீசுப் படைப்போர்' நூலும் செய்யது முகம்மதுப் புலவர் எழுதிய ‘நபுஸ் படைப்போர்’ இலக்கியமும் குறிப்பிடத்தக்க வேறு சில படைப்போர் இலக்கியங்களாகும்.

தமிழுக்கென்றே தமிழ்ப் பெயரோடு தமிழ் முஸ்லிம் புலவர்கள் உருவாக்கிய புத்தம் புதிய இலக்கிய வடிவமான படைப்போர் இலக்கியங்கள் தமிழுக்கு மேலும் பொலிவும் வலுவும் சேர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளன என்பது மறக்க முடியாத உண்மையாகும்.