பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

ஒருநாள் இரவு ஈசுபு மிசிறு நாடு வந்திருப்பதைத் தன் கனவில் கண்டு அவர் மீது காதல் மிகக் கொண்டாள். சுலைகா கணட கனவைக் கூறவந்த மதாறுப் புலவர்.

"வயதின் முதியவள் சொல்லைக் கேட்டு
      மனது பிரியமா இருக்குநாளில்
நயமா மஃறிபு ராச்சியத்து
      நகருக்கதிபதி யரசனுக்கு
இயல்பா யொருமகள் சுலைகாவென
       இலங்கு வடிவினில் மதிமுகத்தால்
பயனாம் கொப்பனய்கண்டு முன்னால்
      பட்சமுடன்வாழ் விரகமானாள்"

என சுலைகாவெனும் மங்கை நல்லாள் ஈசுபுமீதுகொண்ட மையலையும் அதனாலேற்பட்ட விர கதாபத்தையும் அழகாகக் கூறியுள்ளார்.

கனவிற் கண்டு காதல் கொண்ட சுலைகா ஈசுபுவின் நினைவாக துயரமடைந்திருப்பதை அறிந்த மஃறிபுநாட்டு மன்னன், தன் மகனின் மனதிற்குகந்த மணாளனை அடையச் செய்வதன்மூலம் மகளை மகிழ்ச்சிப்படுத்த விழைந்தான். தன் மகள் சுலைகாவின் காதல் விரக உணர்வை விளக்கி மிசிறு நாட்டு மன்னனுக்குத் துாது அனுப்பினான். தூதுவன் தந்த தகவலைத் தவறாகப் புரிந்து கொண்ட மிசிறு மன்னன் அசீசு என்பவன் சுலைகாவை வரவழைத்துத் தன் அரண்மனையில் தங்க வைத்துக் கொண்டான். தான் கனவில் கண்ட மதிமுக ஈசுபைக் காணாது சுலைகா வருந்தினாள். தான் கனவில் பார்க்காத மிசிறு மன்னன் அரண்மனையில் தங்கியிருப்பதைக் கண்டு திகைத்தாள்.