பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை



வதே பயன் தருவதாக அமையும் என்று எண்ணினேன். ஆராய்ச்சிக் குழுவினரும் அவ்வாறே கருதினர்.

பத்துத் தொகுதிகளில் பேராசிரியர் அவர்களுடைய அனைத்துக் கட்டுரைகளையும் வெளியிடுவது என்பது மாபெரும் திட்டம். பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் வரை இவை வரும். இருப்பினும், இன்றைய தலைமுறையின் தலை சிறந்த ஆய்வாளர் ஒருவருடைய எழுத்துக்களை உலகுக்குக் கிடைக்கச்செய்யவேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாதல்லவா?

சக்தி, சரஸ்வதி, சாந்தி, தாமரை, கலைக்கதிர் போன்ற ஏடுகளில் அவர் எழுதியவற்றைத் தொகுத்து வருகின்றோம். சில இதழ்கள் இன்னும் கிடைக்காததால் பணி நிறைவு பெறவில்லை. 1981 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு சில தொகுதிகளையாவது வெளியிட்டுவிடவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றோம்.

இதற்கிடையில் பேராசிரியர் அவர்கள் 'ஆராய்ச்சி' முதல் இதழிலும் ‘தாமரை’ (மலர் 2 இதழ் 7) 1960 ஜூன் இதழிலும் எழுதிய இரண்டு கட்டுரைகளை இங்கு நூலாக வெளியிடுகின்றோம். தொகுக்கும் பணி தாமதப்படுவதால் அவருடைய எழுத்துக்கள் ஆய்வாளர்களுக்குக் கிடைப்பதும் தாமதப்படுகிறது. ஆகவே தொகுப்புப் பணிக்கிடையில் சில கட்டுரைகளை வெளியிடுவது தேவை என்ற எண்ணத்தில் இந்நூலை வெளியிடுகின்றோம். அடுத்து வேறு சில நூல்களும் வெளிவரலாம்.

பேராசிரியர் நா. வா. அவர்கள் மறைவுக்குப் பிறகு மக்கள் வெளியீடு சார்பில் வெளிவரும் அவருடைய முதல் நூல் இது. அவரது முன்னுரை இல்லாமலும் இது வருகிறது.

தமிழ்நாட்டின் சாதியமைப்பு சிக்கல் மிகுந்தது. பேராசிரியர் அவர்கள் இதனைத் தமக்கே உரிய முறையில் ஆய்ந்துள்ளார். சாதியமைப்புக்களின் அடிப்படையை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பார்த்து, உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் பின்னணிகளைத் தெளிவாக்குகிறார்.

மக்கள் வெளியீடு 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது முதல் எதிர்ப்பும் அவரிடமிருந்துதான் கிடைத்தது; முதல் ஆதரவு அளித்ததும் அவரே. ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதில் உள்ள சிக்கல்களை விரிவாக எழுதியதுடன் “உன்னைச் சமூக ஆய்வு அறிஞனாக, மார்க்சீயச் சிந்தனையாளனாகப் பார்க்க விரும்புகிறேனேயன்றி, ஒரு பதிப்பாளனாக அல்ல” என்று அவர் எனக்கு மடல் எழுதினார். அவருக்கு நிறுவனத்தின் தேவையை வலியுறுத்தி எழுதினேன்.