பக்கம்:தமிழ் இனம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தமிழ் இனம்

“காய்சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்; தீவேந்தன் தனக்கண்டித் திறம்கேட்பல் யான் ”

என்று கூறியவளாய், நெடுங்கயற்கண் நீர்சோரப் பாண்டியன் கோயிலை அண்மினாள்; அண்மி, வாயிலோனிடம் பகரும் மாற்றத்தில் அநீதியை அறவே வெறுத்த அவளது உள்ளப் பான்மையை உள்ளவாறு உணரக்கூடும் :

“அறிவரை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே!
இணை அரிச் சிலம்பொன் றேந்திய கையள்......
அறிவிப் பாயே அறிவிப் பாயே ”

என அறைந்தனள். அவ்வளவில், அலறிய அக்காவலன் பாண்டியனை வாழ்த்திப் பணிந்து, கண்ணகி வந்தமையைக் கூறினான். அவன் கூற்றிலிருந்து கண்ணகியின் ‘காளிஸ்வரூபம்’ இற்றென இனிது காணலாம்:

“வந்திருப்பவள்,
அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள் ;
அறுவர்க் கிளைய நங்கை, இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு, சூருடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள் ;
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றாெழில் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே
கணவனை இழந்தாள் கடையகத் தாளே !”

-வழக்குரை காதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/63&oldid=1359122" இலிருந்து மீள்விக்கப்பட்டது