பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாலடியார்

519

நாலாயிரப் பிரபந்தம்


”சொல்லருமை நாலிரண்டில்” என்பன போன்ற மொழிகள் இது கருதியே கூறப்பட்டு வருகின்றன. எண்ணாயிரம் சமணர்கள் தம் நாடு பஞ்சத்தால் பரதவித்தபோது, பாண்டிய நாட்டை அடைந்து வாழ்கையில், பின்னர் நாடு செழிப்புற்றதால் தம் நாடு திரும்பிப் போகையில் ஒவ்வொரு வெண்பாவை பாடித் தாம் இருந்த இடத்தில் எழுதி வைத்து விட்டுச் செல்லப் பாண்டிய மன்னன் தன்னிடம் கூறாது சென்ற சமணர்களின் பாட்டு நாட்டுக்குத் தேவையில்லை என்று சினந்து அவற்றை வைகை ஆற்றில் எறிந்து விடக் கூற, அவற்றுள் நானூறு பாடல்கள் கரையில் ஒதுங்கி நின்றுவிட்டன. அவற்றை எடுத்துப் பதுமனார் எனபவர் செப்பனிட்டனர். இதன் காலம் கடைச்சங்க காலம். இந்நூலை போப் அவர்கள் ஆங்கில மொழியில் மொழி பெயர்த்துள்ளார். சிலர், “இந்நூல் சைனப் புலவர்கள் பலரால் பாடப்பட்ட நூல் அன்று. ஒருவரால் பாடப்பட்ட நூல்” என்றும் கூறுவர். இதன் காலம் கி. பி. 7-ஆம் நூற்றாண்டு எனச் சிலர் கருதுவர்.

நாலாயிரப் பிரபந்தம் = இது வைஷ்ணவர்களுக்குரிய தோத்திர வடிவில் அமைந்த நூல்களுள் சிறந்ததாகும். இந்நூலில் நாலாயிரம் பாடல்கள் இருப்பதால் இந்நூலுக்கு இப்பெயர் கொடுக்கப்பட்டது. இந்நூலுக்குரிய ஆசிரியர்கள் 12 ஆழ்வார்கள் ஆவார். அவர்களே பொய்கையார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார். இந்நூலுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். அவையாவும் தலைசிறந்த உரைகள். அவை ஆழ்வார்களின் உள்ளக் கருத்தை உரைப்பனவாகும். இந்நூலில் கண்ட ஆசிரியர்கள் பல்வேறு காலங்களில் தோன்றினமையின் காலம் குறிக்கப்படவில்லை.