பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்திநிச்சயம்

540

முத்தொள்ளாயிரம்


போல் அமைந்திருந்தலின், இது முதுமொழிக்காஞ்சி எனப்பட்டது. முதுமொழியாவது பழமொழி. ஆசிரியர் கூடலூர் கிழார். காலம் கடைச்சங்க காலம்.

முத்திநிச்சயம் = சைவசித்தாந்த கருத்துகளை அழகுறத் தெளிவுற அறிவிக்கும் நூல்.ஆசிரியர் ஞானசம்பந்த தேசிகர். காலம் 16ஆம் நூற்றாண்டு. இந்நூற் பெயராலேயே மோட்சம் அடைவதற்குரிய வழியினை இந்நூல் வாயிலாக அறியலாம் என்பது கூறாமலே தெரிகிறதல்லவா?

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் = வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துகுமரன் மீது குமரகுருபர சுவாமிகள் பாடிய பிள்ளைத்தமிழ். இதன் மூலம் சோழ நாட்டு வளம், புலவரின் கற்பனைத்திறன் முதலானவற்றைப் படித்து இன்புறலாம். காலம் கி.பி.17 நூற்றாண்டு. சிவபெருமானது சபையிலுள்ள சந்திரனைப் பாம்பினிடம் வைத்தும், மானின் வாயில் அருகம்புல்லை வைத்தலும், இறைவன் மார்பில் கூத்தாடியும், கண் சிவக்க கங்கையாற்றில் குளித்தும், மற்றும் பல குறும்புகளையும் முருகன் செய்வார் என ஆசிரியர் அழகுபட கூறியிருப்பது படிக்கச் சுவை தருவதாகும்.

முத்தொள்ளாயிரம் = இது தமிழ் மொழியில் தோன்றி மறைந்த நூற்களில் ஒன்று. இது சேர சோழ பாண்டியர்கள் மீது தனித்தனியே 900 பாடல்களாகப் பாடப்பட்ட நூலாகும். ஆக 2700 பாடல் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு சிலர் தனித்தனி 300 பாடல்கள் பாடப்பட்டு 900 பாடல்களைக் கொண்டதாக இருக்க வேண்டுமென யூகிக்கின்றனர். என்ன கூறிலும் நமக்கு இது போது கிடைத்துள்ள பாக்கள் சிலவே. அச்சில் அவற்றுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. இதில் 108 பாடல்களே இப்போது கிடைத்துள்ளன. இந்நூலால் மூவேந்தர்களின் சிறப்பு, தமிழ்நாட்டுச் சிறப்பு முதலியன அறியலாம். அகப்பொருள் சுவையுடைய பாடல்கள் படிக்கப் படிக்கச்சுவை தருவனவாகும்.