பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



IV. ஐவகை யிலக்கணம்.
 

 

பாஷையாவது, மக்களது இயற்கை வேட்கையில் தோன்றி, அவரது நாகரிக விருத்தி முறைக்கேற்ப வளர்ந்து வருவதோர் மக்களாக்கப் பொருளாம். அது சொற்கோவைப்பட்டுப் பொருள் அறிவுறுக்கும் வாக்கியங்க ளாலாயது; இவ்வாக்கியங்களெல்லாம் பொருள் அறிவுறுக்குஞ் சொற்களாயின; இச்சொற்கள் தாமும் பகுதி விகுதி இடைநிலை முதலிய பல வுறுப்புக் களாலாயின.

இவ்வுறுப்புக்களுள்ளும் பகுதிகளெல்லாம், பெரும்பான்மையும் ஆதியிலிருந்த தமிழ்மக்கள் சொற்சொல்லத் தொடங்கிய காலத்துப் பிறந்த சொற்கோவை சிதைந்து மருவிய சொற்களாம்; சிறுபான்மை ஒலிக்குறிப்பு வியப்புக் குறிப்பு முதலியகாரணங்கள் பற்றி வந்த சொற்களாம். இனி விகுதி முதலாயின வெல்லாம் ஒரு காலத்தில் முழுமுதற் சொற்களாய்ப் பொருளறி வுறுத்தி நின்று, பின்னொரு காலத்து மக்கள், குறிப்பின்மை, சோம்பல், பொச் சாப்பு, முயற்சிச் சுருக்கம் ஆகிய காரணங்களாற் சொற் சோர்வுபட மொழி தலாற் பலவாறு திரிந்து மருவி இடைச் சொற்களென்று வழங்கப் படுவன வாயின. நாகரிகம் முதிருக்தோறும் முதிருந்தோறும் பாஷை மாறுபட்டுச் சொற்களைச் சிதைத்து வழங்கும் வழக்கம் மக்களுக்குப் பல அசெளகரியங்கள் விளைவித்தன.

தமிழ்ச்சொற்களை மாந்தர் மேலும் மேலுஞ் சிதைத்து வழங்காதவாறு, ஆசிரியர் அகத்தியனார் தொல்காப்பியனார் போன்ற நன்மக்கள் தோன்றி, அச் சொற்களை மேல்வழங்கு முறைகாட்டி வரம்பறுத்து இலக்கண நூல்கள் வகுத்துத் தமிழ்ப் பாஷையை யொழுங்குபடுத்தி நிறுத்துவாராயினர். இங்ஙனம் ஒழுங்குபடுத்தப்படாத பாஷைகளெல்லாஞ் சில சிதைந்து வழங்கி இறுதியில் உருக்குலைந்து வழக்கமற்று ஒழிந்துபோம்.

மேற்கூறியவாறு தமிழ்மொழிக்கு முதன்முதல் இலக்கண நூல்வகுத்தவர் அகத்தியனார். அவர் இயலிசை நாடகமென்ற முத்தமி ழிலக்கணமும் முறைப்பட வகுத் தோதினார். இசைநாடகத் தமிழிலக்கணங்களை யெடுத்துக் கூறாது இயற்றமிழிலக்கணத்தைமட்டில் வகுத் தோதினர் தொல்காப்பியனார். இப்பொழுது ‘அகத்தியத்’தின் குத்திரங்கள் சிற்சிலமட்டில் ஆங்காங்குத் தொல்லை நூலுரைகளிற் காணப்படுகின்றனவேயன்றி நூன் முழுதுங் காணப் படவில்லை; ஆகவே ‘தொல்காப்பிய’ மொன்றுமே முழு முதலிலக்கண நூலாய்க் குறைபாடின்றி யிதுகாறும் இலங்காநின்றது; இனியும் இலங் காநிற்கும். இவ்வியற்றமி ழிலக்கணநூல் ‘எழுத்து’, ‘சொல்’, ‘பொருள்’ என்ற மூன்றதிகாரங்களாக வகுக்கப்பட்டுளது.

எழுத்ததிகாரத்தில் எழுத்தினியல்புகளும், எழுத்தானாகிய மொழிகளும், அவற்றின் புணர்ச்சிகளும் முதலாயின விரித்துக் கூறப்பட்டுள. சொல்லதிகா