பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

களாக மாறிவிடும்.தொடர்நிலையன உருபுநிலை யுற்றன. இறுதியிற் பிரிவுநிலை யனவாய் விளங்கும். தமிழ்மொழியோ தனிநிலை கடந்து தொடர்நிலையில் இருக்கின்றதென்று பலருங் கூறுவர். ஆனால் தமிழ் மகள் தொடர்நிலையில் ஒரு தாளையூன்றியும் மற்றைத்தாளை உருபு நிலையில் வைக்குமாறு எடுத்தும் நிற்கின்றனள் என்று கூறுதலே யேற்புடைத்தாம்.

பாஷை வேறுபடுமாற்றில் யாவரும் கருதத்தக்கதோ ருண்மையுண்டு. அஃதாவது பாஷைகளெல்லாம் சில சமயங்களில் மிகவும் விரைந்து வேறுபட்டும், வேறு சிலசமயங்களில் மிகவுந் தாமதமாக வேறுபட்டுஞ் செல்லும் இயல்புடையன. இவ்வுண்மைக் கிணங்கியே தமிழ்ப்பாஷையும் பரந்த கொள்கைகள் மேவி விரிந்து வேறுபடுகின்றது. சிலகாலம் மிக விரைந்தும், சிலகாலம் வேறுபாடு தோன்றாமல் அமைந்தும், சிலகாலம் மந்தமாக மெல்லென நின்று நின்றும் வேறுபட்டுச் செல்லாநின்ற தமிழ்மகளின் செலவு ஒரு பேராற்றின் இனியவொழுக்கம் போலும். எப்பொழுதும் ஏட்டு வழக்குத் தமிழும், பேச்சு வழக்குத் தமிழும் வேறுபட்டுக்கொண்டே வந்திருக்கின்றன. ஆதியில் இவ்விரண்டும் அதிக வேறுபாடின்றி ஒத்தன வெனினும், ஏட்டுவழக்குத் தமிழ் வேறுபாடுறுவது மிகமந்தமான நடையிலேதான். மற்றுப் பேச்சுவழக்குத் தமிழ் வேறுபடுவதே மிகவிரைவான நடையிலேயாம். எனவே ஏட்டுவழக்குத் தமிழ்க்கும் பேச்சுவழக்குத் தமிழ்க்கும் இக்காலத்திலுள்ள பேதம் மிகவதிகமாம். இதுவும் அதுவும் வெகுதூரத்தில் நிற்கின்றன. இவ்விரண்டும் தமக்குள்ளே அதிகமாக வேறுபட்டு வெகுதூரத்தில் நிற்கவொட்டாது முயல வேண்டுவது இலக்கண நூலார்க்கு உற்றதொழிலாம். இனி இத்தகைய வேறுபாடுகளினால் உண்டாகும் பயன்கள் யாவை என்ற விஷயத்தைக் குறித்து ஆராய்வாம்.

சொற்களும் சொற்றொடர்களும் வாக்கியங்களும் சொல்லின் பாகங்களும் தத்தமக்குரிய பொருட்பெற்றி விரிந்துங் குறைந்தும் முற்றிலும் வேறுபட்டும் போகின்றன. பொதுவாகப் பலபொருள்களைக் குறித்துநின்ற சொற்கள் சிறப்பாகச் சிலவற்றையேனும் ஒன்றையேனுங் குறிக்கும் நிலைமையை யடைகின்றன. இதனைப் ‘பொதுப்படை நியமம்’ என்னலாம். உதாரணமாக, ‘நெய்’ என்ற சொல்லைக் காண்க. இஃது ஆதியிற் பசுவின்நெய், வேட்பநெய், எள்ளின்நெய், ஆமணக்கு நெய், இலுப்பைநெய் முதலிய பலவற்றிற்கும் பொதுவான சொல். அஃது இப்பொழுது பசுவினெய், எருமைநெய்களையே சிறப்பாகக் குறிக்கின்றது. மற்றுச்சிறப்பாக ஒவ்வொரு பொருளையே குறித்துநின்ற சொற்கள் பொதுவாகிப் பல பொருள்களையுங் குறிக்கும் நிலைமையை யடைதலுமுண்டு. இதனைச் ‘சிறப்புப்படை நியமம்’ என்னலாம். ஆதியில் எள்ளினின்று போந்த நெய் என்ற ஒரே பொருளைக் குறித்த ‘எண்ணெய்’ என்ற சொல் இப்போது பொதுவாகி, ‘வேப்பெண்ணெய்,’ ‘விளக்கெண்ணெய்,’ ‘இலுப்பெண்ணெய்’ என்பனவாதிய பலபொருள்களையுங் குறிக்கின்றது. ‘ஓலை,’ ‘மரக்கால்’ என்