பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

மக்சீம் கார்க்கி


“ஏன்? பாவெலைத் தவிர, வேறு யாராவது உண்டா?” என்று கேட்டாள் தாய்.

“அவன் நாற்பத்தொன்பதாவது நபர்” என்று அமைதிபாய்க் குறுக்கிட்டுப் பேசினான் இகோர் இவானவிச்; “தொழிற்சாலை நிர்வாகம் இன்னும் குறைந்த பட்சம் ஒரு டஜன் ஆட்களையாவது உள்ளே தள்ளும்! இதோ இந்த இளைஞனைக்கூட!”

“ஆமாம். என்னைக் கூடத்தான்” என்று சோர்ந்துபோய்ச் சொன்னான் சமோய்லவ்.

பெலகேயாவுக்கு என்ன காரணத்தாலோ முன்னைவிடச் சுலபமாகச் சுவாசிக்க முடிந்தது.

“நல்ல வேளை. அவன் மட்டும் அங்குத் தனியாகத் தவிக்க மாட்டான்” என்ற எண்ணம் அவள் மனத்தில் மின்னிட்டு மறைந்தது.

உடை உடுத்தி முடிந்தவுடன், அவர்களோடு கலந்துகொண்டாள் அவள்.

“இத்தனை பேரைக் கொண்டு போனால், அவர்களை அதிக நாள் உள்ளே வைத்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.”

“நீங்கள் சொல்வது ரொம்ப சரி” என்றான் இகோர் இவானவிச். “இந்த மாதிரியாக அவர்கள் கெடுபிடி செய்வதை மட்டும் நாம் தகர்த்துவிட்டால், அப்புறம் அவர்கள் தங்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓட வேண்டியதுதான், ஆமாம். நாம் மாத்திரம் துண்டுப் பிரசுரங்களை வினியோகிப்பதை நிறுத்திவிட்டால், போலீஸ்காரர்கள் இதுதான் சாக்கு என்று பாவெலையும் அவனோடு சிறையில் தவிக்கும் தோழர்களையும் தாக்க முனைவார்கள்.”

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று பதறிப்போய்க் கேட்டாள் தாய்.

“சின்ன விஷயம் தான்!” என்று பதிலளித்தான் இகோர் இவானவிச். “சமயங்களில் போலீஸ்காரர்கள்கூட தர்க்க ரீதியாகச் சிந்திக்கிறார்கள். நீங்களே நினைத்துப் பாருங்களேன். பாவெல் இருந்தான்—துண்டுப் பிரசுரங்களும் அறிக்கைகளும் பரவிக்கொண்டிருந்தன. பாவெல் இல்லை—துண்டுப் பிரகரமும் அறிக்கைகளும் இல்லை. எனவே அவன்தான் அவற்றைப் பரப்பினான். இல்லையா? அவர்கள் ஒவ்வொருவரையும் கடித்துக் குதறித் தீர்க்க முனைவார்கள். போலீஸ்காரர்கள் ஒருவனைச் சின்னாபின்னாமாக்குவதென்றால், அந்த மனிதன் இருந்த இடம் தெரியாமல் செய்துவிடுவார்கள். அதுதான் அவர்கள் வழக்கம்”