பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

மக்சீம் கார்க்கி


வழியைத் தாமே கண்டுகொள்வார்கள். அவர்களுக்கு உண்மையைப் புரிய வைப்பதுதான் என் வேலை. அவர்கள் தம்மைத் தாமே நம்பவேண்டும். அவர்களுக்கு உதவுவதெல்லாம் அவர்களது சொந்த அறிவுதான் ஆமாம்!”

அவள் அந்த மனிதனுக்காக அனுதாபப்பட்டாள்; அவன் போக்கைக் கண்டு அஞ்சவும் செய்தாள். எப்போதுமே அவள் மனதுக்குப் பிடிக்காதிருந்த ரீபின். இப்போது, ஏதோ ஒரு புரியாத காரணத்தால், அவள் அன்புக்கு உரியவனாகத் தோன்றினான். எனவே அவள் அவனிடம் மிருதுவாகச் சொன்னாள்.

“அவர்கள் உன்னை பிடித்துக்கொண்டுபோய் விடுவார்கள்...” ரீபின் அவளை ஏறிட்டுப் பார்த்தான்;

“அவர்கள் என்னைக் கைது செய்வார்கள்; பிறகு விட்டுவிடுவார்கள். அதன்பின் நான் என் வேலையை மீண்டும் தொடங்குவேன்!”

“முஜீக்குகளே[1] உன்னைக் கட்டிப்போட்டு விடுவார்கள். சிறையில் தள்ளுவார்கள்.

“நான் சிறைவாசம் அனுபவிப்பேன்; பிற்கு வெளியேயும் வருவேன், மீண்டும் என் வேலையையே தொடங்குவேன். முஜீக்குகள் என்னை மீண்டும் ஒருமுறை, இருமுறை, பலமுறை கட்டிப்பிடித்துச் சிறைக்கு அனுப்புவார்கள். அதன் பிறகுதான் என்னைக் கட்டிப்போடத் தயங்கி நின்று, நான் சொல்வதை அவர்கள் காதில் வாங்குவார்கள்; உணரத் தொடங்குவார்கள், “என்னை நம்பவேண்டாம் ஆனால் நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்” என்பேன் நான். அவர்கள் கேட்கமட்டும் தொடங்கிவிட்டால், அப்புறம் என்னை நம்பவும் தொடங்குவார்கள்.”

அவன் மிகவும் மெதுவாகவே பேசினான்; ஒவ்வொரு வார்த்தையையும் எடை போட்டுத் தரம்பார்த்து நிதானமாகப் பிரயோகிப்பது மாதிரி தோன்றியது.

“அண்மையில் நான் நிறையக் கேள்விப்பட்டேன். ஏதோ கொஞ்சம் புரிந்துகொண்டேன்....”

“மிகயீல், இவானிவிச் இத்துடன் நீ முடிந்து தொலையட்போகிறாய்” என்று தலையை வருத்தத்தோடு அசைத்துக் கொண்டு சொன்னாள் தாய்.


  1. முஜீக்–ருஷ்ய விவசாயி. பொதுவாக ஆண்களைச் சற்று இளக்காரமாகக் குறிப்பதற்கும் வழங்கும் சொல்.—மொ-ர்.