பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

மக்சீம் கார்க்கி


"இதோ அவளும் வந்துவிட்டாளே” என்று கத்தினான் ஹஹோல், திடீரெனத் திரும்பிய பாவெலின் முகத்தில் ஏதோ ஆறுதல் தரும் உறுதிமிக்க உணர்ச்சி பிரகாசிப்பதாக அவளுக்குத் தோன்றியது.

“வந்துவிட்டான் - வீடு வந்து சேர்ந்துவிட்டான்” என்று அவள் தடுமாறிக் குழறினாள். அவனது எதிர்பாராத வரவினால் அவள் மெய்மறந்து நிலைகுழம்பிப்போய் அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

அவன் தனது வெளிறிய முகத்தை அவள் பக்கமாகக்கொண்டு போனான். அவனது உதடுகள் துடித்து நடுங்கின. கண்ணின் கடையோரத்தில் ஈரம் பளபளத்துக் கசிந்தது. ஒரு கண நேரம் அவன் எதுவுமே பேசவில்லை. அவளும் அவனை மௌனமாக வெறித்துப் பார்த்தாள்.

ஹஹோல் அவர்களைவிட்டு விலகி வெளி முற்றத்துக்கு வந்து சீட்டியடிக்கத் தொடங்கினான்.

“நன்றி, அம்மா!” என்று தணிந்த குரலில் தளதளத்துக்கொண்டே தனது நடுங்கும் விரல்களால் அவளது கரத்தைப் பற்றி அழுத்தினான் பாவெல், “என் அன்பே! மிகுந்த நன்றி.”

“அவனது முகத்திலே தோன்றிய உணர்ச்சியையும், சொல்லிலே தொனித்த இனிமையையும் கண்டு புளகாங்கிதம் அடைந்து தன்னை மறந்து போன அந்தத் தாய், மகனின் தலையைத் தடவிக் கொடுத்தாள், தனது இதயத்தின் படபடப்பைச் சாந்தி செய்ய முயன்றாள்.

“அட, கடவுளே, எனக்கு எதற்காக நன்றி கூறுகிறாய்?” என்றாள் தாய்.

“எங்களது மகத்தான கருமத்தில் நீ ஒத்துழைத்ததற்காக! உனக்கு நன்றி, அம்மா!” என்று திரும்பச் சொன்னான்: “தானும் தன் தாயும் ஒரே மாதிரி உணர்ச்சிகொண்டவர்கள், ஒரே கொள்கை வசப்பட்டவர்கள் என்று ஒருவன் கூறிக்கொள்வது கிடைப்பதற்கரிய பேரானந்தம், அம்மா!”

அவள் மௌனமாக இருந்தாள் அவனது வார்த்தைகளைத் திறந்த மனத்தோடு, ஆர்வத்தோடு அள்ளிப் பருகினாள். தன் முன்னே மிகவும் நல்லவனாக, அன்புருவமாக நின்ற தன் மகனைக் கண்டு வியந்துகொண்டிருந்தாள் தாய்.

“அம்மா, உனக்கு எவ்வளவு சிரமமாயிருந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஏதேதோ உன் மனத்தைப் பிடித்து இழுத்தது என்பது எனக்குத் தெரியும். நீ எங்கள் கருத்துக்களோடு ஒத்துவரமாட்டாய், எங்கள் கருத்துக்கள் உன்கருத்துக்களாக என்றுமே ஆகப்போவதில்லை.