பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

183


மழுப்புவதற்காக: “அப்பப்பா! நான் ஒரேடியாய் விறைத்தே போனேன்!” என்று சொல்லிக்கொண்டாள்.

பாவெல் அவளிடம் மெதுவாகப் போய் சேர்ந்தான். அவனது தலை தொங்கிப்போயிருந்தது. குற்றமுள்ள குறுஞ்சிரிப்பு அவன் உதடுகளில் கோணி வதங்கியது.

“என்னை மன்னித்துவிடு. அம்மா. நான் இன்னும் சின்னப்பிள்ளை மூமூ முட்டாள்....”

“என்னைத் துன்புறுத்தாதே அப்பா” என்று அவளது தலையைத் தன் மார்போடு அணைத்தவாறு பரிதாபகரமாகக் கத்தினாள் அவள்:” ஒன்றுமே சொல்லாதே. நீ உன் இஷ்டப்படி வாழ்வதற்கு உரிமையுள்ளவன். கடவுள் உனக்கு அருள் செய்வார். அப்பா. ஆனால் என் இதயத்தைப் புண்படுத்தாதே. தாய் தன் பிள்ளைப் பாசத்தை விட்டுவிட முடியுமா? அவள் தன் பிள்ளையை நேசிக்கத்தான் செய்வாள். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். நீங்கள் எல்லோருமே எனக்குப் பிரியமானவர்கள்; நீங்கள் அனைவரும் நேசிக்கத் தகுதியுள்ளவர்கள். உங்களுக்காக நான் அனுதாபப்படாவிட்டால், வேறு யாரப்பா அனுதாபம் கொள்வர்கள்? நீங்கள் அனைவரும் தலைமை தாங்கிச் செல்ல, உனக்குப் பின்னால் மற்றவர்கள் அனைவரும் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டுச் செல்வீர்கள்....... பாஷா?”

அவனது நெஞ்சுக்குள் கனன்றெரிந்து கனலெழுப்பும் மகத்தான சிந்தனைகள் துடித்துக்கொண்டிருந்தன. சோகங்கலந்த இன்டாம் அவளது இதயத்தில் ஊடாடியது. எனினும் அதை வெளியிட்டுக் கூற அவளுக்கு வார்த்தை கிடைக்கவில்லை. வாய் பேச முடியாத ஊமை நிலையின் சித்திர வேதனையோடு, அவள் தன் மகனை ஆழமும் கூர்மையும் பெற்ற வேதனை நிறைந்த கண்களோடு வெறித்துப் பார்த்தாள்.

“ரொம்ப சரி, அம்மா. என்னை மன்னித்துவிடு. எனக்கு இப்போதுதான் எல்லாம் தெரிகிறது. இனி நான். இதை மறக்கவேமாட்டேன். சத்தியமாய்ச் சொல்லுகிறேன் மறக்கவேமாட்டேன்” அவன் புன்னகை அரும்பும் தன் முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டான். அவனது முகத்தில் குதரகலம் தொனித்தது: அவமானத்தால் குன்றியும் போயிருந்தது.

அவள் அவனை விட்டுப்பிரிந்து அடுத்த அறைக்குள் சென்றாள்.

“அந்திரியுஷா!” என்று பரிவு கலந்த தொனியில் கூப்பிட்டாள் அவள், “அவனை அதட்டாதே. நீ பெரியவன்.......”