பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

மக்சீம் கார்க்கி


சீனி எதுவுமே — கிடைப்பதில்லை. கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை, பசிப்பேய் அவர்களது இதயங்களையே தின்று விழுங்குகிறது; முகங்களைக் கோரமாக்குகிறது, அந்த ஜனங்கள் வாழவில்லை; எட்டாத தேவைகளில் அழுகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே சமயம் அவர்களைச் சுற்றியுள்ள அதிகாரிகளோ, அவர்கள் கையில் ஒரு சிறு ரொட்டித் துண்டுகூடச் சிக்கிவிடாதபடி, கழுகுகளைப்போலக் கண்காணித்து வருகிறார்கள்! அப்படியே தப்பித்தவறி ஒரு முஜீக்கின் கையில் கொஞ்சம் உணவு கிட்டிவிட்டால், உடனே அதனைத் தட்டிப் பறிப்பதோடு. அவனது கன்னத்திலும் அறைகிறார்கள்.....”

ரீபின் மேசை மீது கையைத் தாங்கியவாறு திரும்பி பாவெலை நோக்கித் தலையைச் சாய்த்தான்:

“அந்தக் கொடிய வாழ்க்கையைக் கண்டு என் வயிறுகூட உள்ளடங்கிப் போயிற்று. அந்த வாழ்க்கையை என்னால் தாங்க முடியாது என்று நினைத்தேன். அப்புறம் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்: ‘இல்லை, நீ அப்படிச் செய்யக்கூடாது. மனதைத் தளரவிடக்கூடாது. இந்த வாழ்விலிருந்து நீ பிரிந்து செல்லக்கூடாது. உன்னால் அவர்களுக்கு உணவு அளிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நீ அவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும்! அதனாலேயே அங்கு தங்கினேன். மக்களுக்காகவும், மக்களின் மீதும் எனக்கு ஏற்பட்டுள்ள பகைமை, வெறுப்பு எல்லாம் என் இதயத்துக்குள்ளே பொருமிப் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வெறுப்புணர்ச்சி இன்னும் என் மனதை ஏன் இதயத்தைக் கத்தி போல் குத்திக்கொண்டிருக்கிறது!”

மெதுவாக அவன் பாவெலின் அருகே சென்று அவனது. தோள்மீது கையைப்போட்டான். அவனது நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தது. கைகள் நடுங்கியது.

“பாவெல். எனக்கு உன் உதவி தேவை. நீ எனக்குப் புத்தகங்கள் கொடும் ஒரு முறை படித்தாலும், இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்து, சிந்தித்துச் சிந்தித்து வெறிகொள்ளச் செய்யும் புத்தகங்களாகக் கொடு. அவர்களது மூளையிலே ஒரு முள்ளம் பன்றியைக் குடியேற்ற வேண்டும். தனது முட்களைச் சிலிர்த்துக்கொண்டு நிற்கும் முள்ளம் பன்றி! அப்போதுதான் அவர்கள் விழிப்படைவார்கள், உங்களுக்காக எழுதுகின்ற நகரவாசிகளிடம் கிராமாந்திர ஜனங்களுக்காகவும் ஏதேனும் புத்தகங்கள் எழுதச்சொல். அவர்கள் எழுதுகின்ற எழுத்துக்கள் ஒரே துடிப்பும் உணர்ச்சியும் உஷ்ணமும் பொருந்தியனவாக இருக்கட்டும். கொள்கைக்காகக் கொலை செய்யவும் தயாராகும் வெறியை அந்த நூல்கள் மக்களுக்கு உண்டாக்கட்டும்!”