பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

மக்சீம் கார்க்கி


“நானா? எனக்கு அப்படியொன்றும் தெரியவில்லை. என்னவோ அவனை எனக்கு ரொம்பவும் பிடித்துப்போயிற்று. எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை.”

“உனக்கு மிகவும் அன்பான மனம், அம்மா” என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.

“நான் மட்டும் உனக்கு -உன் தோழர்கள் அனைவருக்கும்-உதவ முடிந்தால், கொஞ்சமேனும் உதவி செய்ய முடிந்தால்?எப்படி உதவுவது என்பது மட்டும் தெரிந்தால்?”

“கவலைப்படாதே. அம்மா நீ தெரிந்துகொள்வாய்.”

“எனக்கு அது மட்டும் தெரிந்துவிட்டால் அப்புறம் கவலையே இராது” என்று சிறு சிரிப்புடன் கூறினாள் தாய்.

“சரி, அம்மா, இந்தப் பேச்சைவிட்டு விடுவோம். ஆனால் ஒன்று மட்டும் ஞாபத்தில் வைத்துக்கொள். உனக்கு நான் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவன்.”

அவள் பேசாது சமையலறைக்குள் சென்றாள். தன் கண்களில் பொங்கும் கண்ணீரை அவன் பார்த்துவிடக்கூடாதே என்ற அங்கலாய்ப்பு அவளுக்கு.

அன்று இரவு ஹஹோல் வெகுநேரம் கழித்துத்தான் வீடு திரும்பினான். வந்தவுடனேயே அவன் படுக்கச் சென்றுவிட்டான்.

“நான் இன்றைக்குப் பத்து மைலாவது நடந்திருப்பேன்’.

“அதனால் பலன் இருந்ததா?” என்று கேட்டான் பாவெல்.

“தொந்தரவு பண்ணாதே, எனக்குத் தூக்கம் வருகிறது.”

அவன் அதற்குப் பிறகு எதுவுமே பேசவில்லை.

சிறிது நேரம் கழித்து, நிகலாய் வெஸோவ்ஷிகோவ் உள்ளே வந்தான். அவனது ஆடைகள் கிழிந்து கந்தல் கந்தலாயிருந்தன. ஒரே அழுக்கு மயமாகவும் அதிருப்தி நிறைந்தவனாகவும் அவன் வந்து சேர்ந்தான்.

“இஸாயை யார் கொன்றார்கள் என்று கேள்விப்பட்டாயா?” என்று பாவெலிடம் கேட்டுக்கொண்டே அவன் அறைக்குள் நடக்க ஆரம்பித்தான்.

“இல்லை’ என்று சுருக்கமாக விடையளித்தான் பாவெல்.

“எவனோ ஒருவன் வேண்டா வெறுப்பாக இந்தக் காரியத்தில் முந்திவிட்டான். நானே அந்தப் பயலைத் தீர்த்துக் கட்டவேண்டும் என்று இருந்தேன். நான் தான் அதைச் செய்திருக்க வேண்டும். அதற்கு நான்தான் தகுந்த ஆசாமி.”