பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

மக்சீம் கார்க்கி


வெகு நாட்களாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்துவிட்டது–மே தினம்! மே மாதப் பிறப்பு!

ஆலைச் சங்கு வழக்கம் போலவே அலறியது. கடந்த இரவு முழுவதும் கண்ணையே இமைக்காது விழித்துக் கிடந்த தாய் சங்குச் சத்தம் கேட்டதும் உடனே படுக்கையிலிருந்து துள்ளியெழுந்து, முந்தின நாள் மாலையில் தயாரித்து வைத்திருந்த தேநீரை கொதிக்க வைத்தாள். வழக்கம் போலவே தன் மகன். படுத்திருக்கும். அறைக் கதவைத் தட்ட நினைத்தாள். ஆனால் கதவைத் தட்டி அவனை எழுப்பாமலிருப்பது நல்லது என்று எண்ணியவளாய் ஏதோ பல்லவிக்காரியைப் போல, தன் கையை மோவாயில் கொடுத்துத் தாங்கிக்கொண்டு ஜன்னலருகே சென்று கீழே உட்கார்ந்தாள்.

வெளிறிய நீல வானத்தில் ரோஜா நிறமும் வெண்மையும் கலந்த மேகப் படலங்கள் மிதந்து சென்றன. ஆலைச் சங்கின் அலறலால் பயந்தடித்துக்கொண்டு பறந்தோடும் ஒரு பெரிய பறவைக் கூட்டம் போலத் தோன்றியது அந்த மேகக் கூட்டம், தாய் அந்த மேகத் திரளைப் பார்த்தாள், தனது இதயத்தில் எழுந்த சிந்தனைகளோடு தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள். அவளது தலை களத்துப் போயிருந்தது. இரவு முழுவதும் தூங்காததனால் கண்கள் வறண்டு சிவந்து கனன்ற போயிருந்தன. அவளது இதயத்தில் எதோ ஒரு அதிசயமான அமைதி குடிகொண்டிருந்தது. அவளது மனதில் சாதாரணமான எண்ணங்கள் நிரம்பித் ததும்பிச் சுறுசுறுப்போடு இயங்கிக்கொண்டிருந்தன.

‘நான் தேநீரை ரொம்ப சீக்கிரம் கொதிக்க வைத்தேன். தண்ணீர் பூராவும் சீக்கிரம் கொதித்துக் காய்ந்துவிடும்.... அவர்கள் இருவரும் மிகவும் களைத்துப் போயிருக்கிறார்கள். இன்றைக்குக் காலையிலாவது அவர்கள் கூடக் கொஞ்ச நேரம் தூங்கட்டும்.......”

காலைக் கதிரவனின் இளங்கதிர்க் கீற்று மிகுந்த உவகையோடு ஜன்னலின் மேலாக எட்டிப் பார்த்தது, அந்தக் கதிரை நோக்கித் தன் கையை நீட்டினாள் தாய், அவளது சருமத்தின் மீது அந்த இளங்கதிர் தோய்ந்து. அதனால் சிறிது கதகதப்பு ஏற்பட்டபோது அவள் தனது மறு கையால் அந்தக் கதகதப்பான பாகத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டாள். அதே வேளையில் சிந்தனை வயப்பட்டு லேசாகச் சிரித்துக் கொண்டாள். பிறகு அவள் அங்கிருந்து எழுந்து தேநீர்ப் பாத்திரத்தின் குழாயைச் சுத்தம் செய்யாமல் திருகி விட்டாள். பின்பு முகம் கை கழுவிவிட்டு தன் முன்னால் கையால் சிலுவை கீறிக்கொண்டு பிரார்த்திக்கத் தொடங்கினாள்.