பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

மக்சீம் கார்க்கி


“சக்கரவர்த்திக்கு எதிராக, ஜார் மகாராஜனுக்கு எதிராகக் கிளம்பவதா? கலகம் செய்வதா?” என்று கூரிய குரல் தாயின் காதில் மாறி மாறி ஒலித்தது.

ஆணும் பெண்ணுமாக ஜனக்கூட்டம் தாயைக் கடந்து செல்லும்போது, அவள் கலவரமடைந்த பல முகங்களைக் கண்டாள். அந்த ஜனத்திரள் உருகி வழியும் எரிமலைக் குழம்பு போல் மேலும் மேலும் பொங்கி வந்தது. அந்தப் பாட்டினால்-தனக்கு முன்னேயுள்ள சகல தடைகளையும் துடைத்துத் தூர்த்து, தனது மகத்தான சக்தியினால், நான் செல்லும் பாதையைத் தங்கு தடையற்றதாகச் செய்யும் அந்தப் பாட்டினால்—ஜனங்கள் கவர்ந்திழுக்கப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்கள்.

தூரத்திலே தலைக்குமேலாக நிமிர்ந்து தோன்றும் அந்தச் செங்கொடியை அவள் பார்த்தபோது. தன் மனக்கண் முன்னால் தன் மகனது முகத்தையும்—அவனது தாமிர நிறமான நெற்றியும், நம்பிக்கையும் ஒளியாகப் பிரகாசமுற்ற அவனது கண்களும் அவளது மனக்கண்ணில் தோன்றின.

கூட்டம் முழுவதும் அவளைக் கடந்து முன்னேறிச்சென்ற பின், அவள் அந்தக் கூட்டத்தின் பின்னால் வந்த ஜனங்களைப் பார்த்தாள்; அவர்கள் அவசரம் ஏதுமின்றி சாவதானமாக நடந்து வந்தார்கள். அந்த அணி வகுப்பினால் நேரவிருக்கும் அபாயத்தைப்பற்றித் தெரிந்து கொண்டவர்கள் மாதிரி அதை எதிர்நோக்கி, விருப்பற்றுத் திருகத் திருக அங்குமிங்கும் பார்த்தவாறு அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்கும் ஏதேதோ விஷயங்கள் ஏற்கெனவே தெரிந்திருந்த பாவனையில் தீர்மானமாகப் பேசிக்கொண்டார்கள்:

“பள்ளிக்கூடத்திலே ஒரு பட்டாளம். தங்கியிருக்கிறது. இன்னொரு பட்டாளம் தொழிற்சாலையிலே தயாராய்க் காத்திருக்கிறது!”

“கவர்னர் வந்துவிட்டார்.”

“அப்படியா?”

“அவரை என் கண்ணாலேயே பார்த்தேன். இப்போதுதான் வந்தார்.”

“அவர்கள் நம்மைக் கண்டு பயப்படத்தான் செய்கிறார்கள். யோசித்துப் பார். இல்லையென்றால், கவர்னரும் சிப்பாய்களும் எதற்கு?” என்று ஒருவன் சொன்னான். சொல்லிவிட்டு உற்சாகத்தோடு ஏதோ வன்மம் கூறிக்கொண்டான்.

“அருமைப் பிள்ளைகளா!” என்று நினைத்துக் கொண்டாள் தாய்.