பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

263


அவனது குரல் பெருந்தன்மை நிறைந்ததாகவும், அவளது நலத்தில் அக்கறை கொண்டதாகவும் இருந்தது. “சரி இங்கு ஏதாவது சோதனை நடந்ததா?”

“ஆமாம்., அவர்கள் எல்லாவற்றையும் வெட்கமோ மனச்சாட்சியோ இன்றி உலைத்துக் கலைத்து எறிந்துவிட்டுப் போனார்கள்” என்றாள் அவள்.

“அவர்கள் எதற்காக வெட்கப்படவேண்டும்?’ என்று தன் தோளைக் குலுக்கிக்கொண்டு கேட்டாள் நிகலாய். பிறகு அவள் ஏன் நகருக்கு வீடு மாற்றிக்கொண்டு செல்ல வேண்டும் என்பதை விளக்கிச் சொன்னான்.

அவனது நட்பும் பரிவும் கலந்த நயவுரையை அவள் காது கொடுத்துக் கேட்டாள்; லேசாகப் புன்னகை புரிந்துகொண்டான். அவன் கூறும் காரணங்களை அவள் புரிந்துகொள்ளாவிட்டாலும், அவள் மனத்தில் எழும்பிய அன்பு கனிந்த நம்பிக்கையைக் கண்டு அவளே வியந்துகொண்டாள்.


“பாஷாவின் விருப்பம் அதுவானால், உங்களை நான் ஏதும் சிரமத்துக்கு ஆளாக்காது இருந்தால்...”என்றாள் அவள்.

“அதைப்பற்றி கவலையே வேண்டாம்” என்று குறுக்கிட்டான் அவன். “நான் தன்னந் தனியாகத்தான் வாழ்கிறேன். எப்போதாவது என் சகோதரி மட்டும் என்னைப் பார்க்க வருவாள்.”

“நான் சும்மா வந்து இருந்துகொண்டு உங்கள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது” என்றாள் அவள்.

“விருப்பம் இருந்தால், அங்கு வேலை தேடிக்கொள்ளலாம்” என்றான் நிகலாய்.

வேலை என்ற எண்ணம், தனது மகனும் அந்திரேயும் பிற தோழர்களும் செய்யும் வேலையோடு எப்படியோ பிணைப்புற்றிருப்பதாக அவள் உணர்ந்தாள். அவள் நிகலாய்க்குப் பக்கமாக நெருங்கிச்சென்று அவன் கண்களை உனடுருவிப் பார்த்தாள்.

“உண்மையாகவா? உங்களால் தேடித்தர முடியுமா?” என்று. கேட்டாள்.


“என் வீட்டில் அதிகமான வேலை ஒன்றும் இருக்காது, நான் தான் பிரம்மச்சாரி! ஆயிற்றே.....”

‘நான் அதைப்பற்றி நினைக்கவில்லை–வீட்டு வேலையைப் பற்றியல்ல!” என்று மெதுவாகச் சொன்னாள் அவள்.