பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

மக்சீம் கார்க்கி


மரக்கிளைகளும், வேல மரக்கிளைகளும் வெள்ளிய இலைகள் செறிந்த இளம் பாப்ளார் மரக்கிளைகளும் அந்தப் பகுதியிலிருந்த மூன்று அறைகளின் ஜன்னல்களிலேயும் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தன. அறைகளுக்குள்ளே எல்லாம் சுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தன. மோன நிழல்கள் தரைமீது நடுநடுங்கும் கோலங்களைத் தீட்டிக் கொண்டிருந்தன. சுவரோரங்களில் புத்தக அலமாரிகள் வரிசையாக இருந்தன; அவற்றுக்கு மேல் சிந்தனை வயப்பட்டவர்கள் மாதிரித் தோன்றும் சிலரின் உருவப் படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

“இந்த இடம் உங்களுக்கு வசதியானதுதானே?” என்று கேட்டுக்கொண்டே, நிகலாய் தாயை ஒரு சிறு அறைக்குள் அழைத்துக்கொண்டு சென்றான். அந்த அறையிலுள்ள ஒரு ஜன்னல் தோட்டத்தை நோக்கியிருந்தது. இன்னொரு ஜன்னல் புல் மண்டிக்கிடந்த முற்றத்தை நோக்கியிருந்தது. அந்த அறையின் சுவரோரங்களிலும் புத்தக அலமாரிகள் இருந்தன.

“நான் சமையல் கட்டிலேயே இருந்து விடுகிறேன், சமையல்கட்டே வெளிச்சமாகவும் சுத்தமாகவும் நன்றாகவும் இருக்கிறதே....” என்றாள் தாய்.

அவளது வார்த்தைகள் அவனைப் பயமுறுத்துவது போலிருந்தது. அதன் பிறகு அவன் அவளிடம் எப்படியெல்லாமே சுற்றி வளைத்துப் பேசி, அவளை அந்த அறையில் வசிக்கச் சம்மதிக்கச் செய்த பிறகுதான், அவனது முகம் பிரகாசமடைந்தது.

அந்த மூன்று அறைகளிலுமே ஒரு விசித்திரமான சூழ்நிலை நிரம்பித் தோன்றியது. அங்கு நல்ல காற்றோட்டம் இருந்தது. சுவாசிப்பது லகுவாயிருந்தது. எனினும் அந்த அறையில் யாருமே உரத்த குரலில் பேசுவதற்குத் தயங்குவார்கள். சுவர்களில் தொங்கிக்கொண்டு குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருக்கும் அந்தச் சித்திரங்களிலுள்ள மனிதர்களின் அமைதி நிறைந்த சிந்தனையைக் கலைப்பது அசம்பாவிதமானது போலத் தோன்றியது.

“இந்தச் செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விட வேண்டும்!” என்று ஜன்னல்களிலிருந்த பூந்தொட்டிகளின் மண்ணைத் தொட்டுப் பார்த்துவிட்டுச் சொன்னாள் தாய்.

“ஆமாம்” என்று வீட்டுக்காரன் தனது குற்றத்தை உணருபவன் போலச் சொன்னான். “எனக்கு அவையெல்லாம் ரொம்பப் பிடித்தமானவை. ஆனால் எனக்கு இதற்கெல்லாம் நேரமே இருப்பதில்லை.”