பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

311


அயர்லாந்து நாட்டு மக்களின் பஞ்ச நிலையைப் பற்றியும், இடைவிடாது அடிக்கடி நடத்தப்படும் பிரெஞ்சுத் தொழிலாளர்களின் சுதந்திரப் போராட்டங்களைப் பற்றியும் சோபியா அவர்களுக்கு எடுத்துச் சொன்னாள்.

இருள் திரை படிந்து கவிந்த அந்தத் தோப்பு வெளியிலே, மரங்கள் அடர்ந்து செறிந்த அந்த வெட்ட வெளியிலே, இருண்ட வானமே மேல் முகடாக விளங்கும் அந்த அத்துவானப் பிரதேசத்தில், நெருப்பால் ஒளிபெற்று, வியப்பும் வெறுப்பும் நிறைந்த நிழலுருவங்கள் சூழ்ந்த அந்த இடத்திலே உண்டு கொழுத்து உறங்கும் பேராசைக்காரர்களின் உலகை அசைத்து ஆட்டி உலுப்பிய சம்பவங்களைப் பற்றிய விவரங்கள் உயிர்பெற்று ஒலித்தன. சத்தியத்துக்காகவும் சுதந்திரத்துக்காகவும் பாடுபட்ட வீரர்களின் திருநாமங்கள் உச்சரிக்கப்பட்டன; போராட்டங்களால் களைத்து, போராட்டங்களால் ரத்தம் சிந்தித் தோய்ந்த ஒவ்வொரு நாட்டு மக்களும் வரிசை வரிசையாக அங்கு வந்து சென்றார்கள்.

அந்தப் பெண்ணின் அடங்கிய குரல் மெதுவாக ஒலித்தது. கடந்த காலத்தின் எதிரொலி போன்ற அந்தக் குரல் அவர்களது நம்பிக்கைகளைக் கிளறிவிட்டது; தீர்மானங்களைத் தூண்டிவிட்டது. பிற தேசங்களிலுள்ள தங்கள் சகோதரர்களைப் பற்றிய கதைகளைக் கேட்டவாறே அந்த மனிதர்கள் அசையாது வாய்பேசாது உட்கார்ந்திருந்தனர். உலகத்தின் சகல மக்களும் எந்த ஒரு புனித லட்சியத்துக்காகப் போராடுகிறார்களோ, அந்த லட்சியம் - சுதந்திரத்துக்காக நடைபெறும் இடையறாத முடிவற்ற போராட்டம்—அவர்களுக்கு வரவரத் தெளிவாகியது. அந்தப் பெண்ணின் மெலிந்த வெளுத்த முகத்தைப் பார்க்கப் பார்க்க அந்தப் போராட்டமும் போராட்ட லட்சியமும் அவர்களுக்குப் புரிந்து வரலாயின. அவர்கள் தங்களது சொந்த எண்ணங்களையும், விருப்பங்களையும், தம்மால் அறிய முடியாத வேற்று இன மக்களிடம் கண்டார்கள். அந்த மனிதர்களிடமிருந்து தங்களை ஒரு கரிய ரத்தம் தோய்ந்த கடந்த காலத்தின் இருள் படிந்த திரைபிரித்து நிற்பதாகவும் கண்டார்கள்: தங்களது மனத்தாலும் இதயத்தாலும் அவர்கள் இந்தப் பரந்த உலகம் முழுமையோடும் தொடர்புகொண்டார்கள். ஒரு புதிய ஒளி நிறைந்த ஆனந்த வாழ்க்கைக்காக, தங்களது ரத்தத்தையே சிந்தி அர்ப்பணித்து, உலகத்திலே சத்தியத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற உறுதியான கொள்கைக்காக, வெகுகாலமாக ஒன்றுபட்டு நின்று, அந்த லட்சியத்தின் வெற்றிக்காக சகலவிதமான பெருந்துன்பங்களையும் தாங்கிச் சகித்து