பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

335


கவவைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்” என்றான் இகோர். அவன் வாயைத் திறந்து உதடுகளை அசைத்தான், காற்றையே கடித்துச் சுவைத்துத் தின்பது மாதிரி இருந்தது அவனது வாயசைப்பு. ‘சரி, வேடிக்கைப் பேச்செல்லாம் இருக்கட்டும், முதலில் உன்னை எங்காவது ஒளித்து வைக்க வேண்டுமே. அது ரொம்ப நல்ல காரியம்தான்; ஆனால் லேசில் நடக்கிற காரியமா? நான் மட்டும் எழுந்து நடக்க முடிந்தால்” அவன் பெருமூச்சு விட்டவாறே தன் கைகளை மார்பின் மீது வைத்து, நெஞ்சைத் தடவிக் கொடுத்துக் கொண்டான்.

“நீ ரொம்பச் சீக்காயிருக்கிறாய், இகோர் இவானவிச்!” என்று தலையைத் தாழ்த்திக்கொண்டே, கூறினான் நிகலாய். தாய் பெருமூச்சு விட்டாள். அந்த அடைசலான சிறு அறையை கவலையோடு பார்த்தாள்.

“அது என் சொந்த விஷயம்” என்றான் இகோர். ‘அம்மா, நீங்கள் அவனிடம் பாவெலைப் பற்றிக் கேளுங்கள். சும்மா இன்னும் பாசாங்கு செய்துகொண்டிராதீர்கள்”

“நிகலாய் பல்லைக் காட்டிச் சிரித்தான்.

‘பாவெல் நன்றாகத்தான் இருக்கிறான், சௌக்கியமாயிருக்கிறான், அவன்தான் எங்களுக்குத் தலைவன் மாதிரி இருக்கிறான்; அதிகாரிகளோடு பேசுகிறான்: பொதுவாக, அவன்தான் உத்தரவு போடுகிறான். எல்லோரும் அவனை மிகவும் மதிக்கிறார்கள்.

நிகலாய் வெஸோவ்ஷிகோவ் சொல்வதைக் கேட்டவாறே தலையை அசைத்துக்கொண்டாள் தாய். நீலம் பாரித்து உப்பியிருந்த இகோரின் முகத்தையும் கடைக்கண்ணால் பார்த்தாள். அந்த முகமே அசைவற்று. உணர்ச்சியற்றுத், தட்டையாயிருப்பது போலத் தோன்றியது அவளுக்கு. அவனது கண்கள் மட்டும்தான் உணர்ச்சியோடும் உவகையோடும் ஒளி வீசிக்கொண்டிருந்தன.

“ஏதாவது தின்னக் கொடுங்களேன்—எனக்கு இருக்கிற அகோரப் பசியை உங்களால் கற்பனை கூடப் பண்ண முடியாது” என்று திடீரெனச் சொன்னான் நிகலாய்.

“அம்மா.. அதோ அரங்கிலே கொஞ்சம் ரொட்டி இருக்கிறது” என்றான் இகோர். “அப்புறம் வெளியே ஹாலுக்குப் போய், இடது புறம் இருக்கும். இரண்டாவது கதவைத் தட்டுங்கள். ஒரு பெண் வந்து திறப்பாள். அவளை இங்கே வரச்சொல்லுங்கள், வரும்போது தின்பதற்கு என்னென்ன இருக்கிறதோ. அதையெல்லாம் கொண்டுவரச் சொல்லுங்கள்.”

“எல்லாவற்றையும் ஏன் கொண்டுவரச் சொல்கிறாய்?” என்று கேட்டான் நிகலாய்.